தவத்திரு. தனிநாயக அடிகளார் அறக்கட்டளை, ம.பொ.சி. அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 20.02.2020

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் திங்களை முன்னிட்டு நடைபெற்றுவரும் தமிழ்த்தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழாவின் 20ஆம் நாள் (20.02.2020) நிகழ்வாக, முற்பகல் தவத்திரு தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளை சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் வரவேற்புரையாற்றிட, ‘தில்லிவாழ் தமிழர்களின் மொழியும் கலாச்சாரமும்’ எனும் பொருண்மையில் சென்னை, செல்லம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு. சுசா அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. அவர் பேசுகையில் தில்லித் தமிழ்ச் சங்கம் 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தில்லி வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து மிகச் சிறந்த முறையில் தமிழ்ப் பணியினை ஆற்றிவருகின்றது. தமிழ்நாடு அரசின் ஆதரவும் நிதியுதவியும் தொடர்ந்து அச்சங்கத்திற்குக் கிடைத்து வருகின்றது. அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோர் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட வரலாறும் உண்டு. தில்லித் தமிழ்ச் சங்கத்திற்குத் தமிழ்த் தாய் விருது வழங்கியதோடு தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் விதமாகத் தோரணவாயில் அமைப்பதற்கு 25 இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கி தில்லித் தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கு வழிவகை செய்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்று கூறினார்.

பிற்பகல் நிகழ்வாக, ம.பொ.சி . அறக்கட்டளைச் சார்பில் காரைக்குடி அழகப்பா அரசுக்கலைக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் மா.சிதம்பரம் அவர்கள் ‘திருநெறிய தமிழ்’ எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். அவர் பேசுகையில் 7ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ்ச் சமுகத்தில் தோன்றிய பக்தி இயக்கங்கள்தான் தமிழ் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது. சமணத்தின் தாக்குதலில் இருந்து தமிழைக் காத்தவர்களில் நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் முக்கிய பங்களிப்பு உண்டு என்றார். அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் பேசுகையில் கோவில்கள் என்பது வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல அவற்றில் தமிழரின் வரலாறும் கலையும் பண்பாடும் கல்வெட்டுகளாகவும் சிற்பங்களாகவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்நியர்களின் படையெடுப்பால் பல கல்வெட்டு ஆதாரங்கள் சிதைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் உள்ளன. ஒரு கூட்டம் தமிழ் மக்களைக் கோவிலுக்குள் செல்வதை தடுத்தது. இன்னொரு கூட்டம் கோவிலுக்குள் செல்பவனைப் பகுத்தறிவில்லாதவன் என்றது. இந்த இரு கூட்டமும் இணைந்து தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்களின் பார்வையில் இருந்து மறைத்து அவற்றைத் தமக்குச் சாதகமக மாற்றிக்கொண்டன! ஏனேன்றால் தமிழன் தனது வரலாற்றை முழுமையாக அறிந்துகொண்டால் அக்கூட்டங்களுக்கு ஆபத்து என்பதாலே அவற்றைத் திட்டமிட்டுச் செய்து வந்தனர். அதனை உணர்ந்த இன்றையத் தலைமுறையினர் தமிழரின் வரலாற்றை முழுவதுமாக மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் எழுச்சியோடு செயல்பட்டு வருகின்றனர் என்றார்! இப்பொழிவில் பேரா. செல்வகுமார், அவர்கள் தலைமை வகித்தார். ஆங்காங் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிருவாக உறுப்பினர் முனைவர் சித்ரா சிவக்குமார் அவர்கள் கருத்துரை வழங்கினார். நிறுவன மாணவிகள் செல்வி மே. காமாட்சிப்பிரியா, செல்வி அ. இலாவண்யா ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.மேலும் இந்நிகழ்வில் நிறுவன மாணவர்கள, ஆராய்ச்சியளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.