“உலகமயச்சூழலில் கற்றல் கற்பித்தலும் கலைச்சொல்லாக்கச் சிக்கல்களும்” எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 10.02.2020

10.02.2020 – திங்கள் நிகழ்வில் “உலகமயச்சூழலில் கற்றல் கற்பித்தலும் கலைச்சொல்லாக்கச் சிக்கல்களும்” எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைப்பெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் தலைமை ஏற்றார். தொல்லியல் துறை அறிஞர் குழந்தை வேலன் மற்றும் மொரிஷியஸ் நாட்டின் மகாத்மா காந்தி நிறுவனத்தைச் சார்ந்த முனைவர் ஜீவேந்திரன் சீமான் ஆகிய இருவரும் கலந்து கொண்டு கருத்தரங்கப் பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினர். இந்நிகழ்வில் ஆஸ்திரேலிய தமிழறிஞர் முனைவர் பச்சைவதி கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். அவர் பேசும்போது, மாணவர்களிடையே தமிழ் மொழியைக் கற்பிப்பதற்கான எளிய வழிகளை கண்டறிந்துள்ளதாகவும். தமிழ்க் கல்வியைக் கற்றல் கற்பித்தல் என்னும் இரு நிலைகளிலும் பயன்படுத்தும்போது உடலளவிலான மகிழ்ச்சியும் மன அளவிலான மகிழ்ச்சியும் ஏற்படுத்துகிறது என்றும். இது மின்னணு எந்திரங்களைப் பயன்படுத்திக் கற்கின்ற நுட்பத்தோடு இணைகிறபோது வேகமான கற்றலை மாணவர்கள் உள்வாங்குகிறார்கள். எனவும் மாணவர்களுக்குத் தமிழ் கற்றல் என்பது ஒரு விளையாட்டைப் போல ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு நிகழ்வு. மேலும், அவர்களுடைய கற்றல் என்பது செயல்முறை வடிவமாக ஈடுபடச் செய்வதாக இருத்தல் வேண்டும் எனவும் தமிழைச் செயல்பாடுகள் வழியாகக் கற்றுக் கொடுக்கும்பொழுது அதைக் கற்கின்ற மாணவர்கள் 24 மணி நேரத்தில் தமிழைக் கற்றுக் கொள்ள முடியும் என்கிற செயலாக்கத்தை அயலகங்களில் நிலைநாட்டி வருவதாகவும். தமிழ் எழுத்துகள் எல்லாம் நம்முடைய ஆதித்தமிழர்களின் கிறுக்கல்களில் இருந்து ஒழுங்கான வடிவமைப்பைப் பெற்றதாகவும். “அன்னைமொழி அன்புவழி அமைப்பின்” மூலமாக, ஆஸ்திரேலிய நாட்டின் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் பயின்ற தமிழ் பயிலாத மாணவர்களுக்கும் தமிழ் மொழியை வெகு எளிதாகக் கற்பித்து வருகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு நான் வகுத்த ஒன்பது நிலைத் திட்டங்கள் மூலம் பிழையின்றித் தெளிவான உச்சரிப்புடன் தமிழ்மொழியைக் கற்றுத்தருவதில் வெற்றிபெற்றுள்ளேன். தமிழை அறியாதவர்கள் கூட தமிழைக் கற்றுக்கொண்ட பிறகு உலக மொழிகளின் தாய் தமிழென்று நான் அறியவைத்ததை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பதிவுசெய்வதில் பெருமைப்படுகிறேன் என்றும் தனது பொழிவில் கூறினார். வேல்ஸ் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் துர்காதேவி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் து.ஜானகி உள்ளிட்டோர் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராகப் பணி ஏற்பாடுகளைச் செய்தனர். நிகழ்வின் நிறைவாக, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியருமான முனைவர் பன்னிருகை வடிவேலன் நன்றியுரை நவின்றார்.