அயல்நாட்டு மாணவர்களுக்கு இணைய வழி தமிழ் கற்பித்தல் புதிய அணுகுமுறைகள்

நிகழ்வு நாள் : 02.02.2019

இணைய வழியில் பேச்சுத் தமிழ் கற்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
திருமதி சுதா முத்துராஜ் பேச்சு

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 02.02.2019 இன்று அயல்நாட்டுத் தமிழர் புலம் – உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் சார்பில் அயல்நாட்டு மாணவர்களுக்கு இணைய வழி தமிழ் கற்பித்தல் புதிய அணுகுமுறைகள் எனும் தலைப்பில் திருமதி சுதா முத்துராஜ், நிறுவனர், இணையவழி தமிழ்க் கல்வி மையம், பெங்களூரு, அவர்கள் இன்று சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.
உலக அளவில் இணைய வழியில் பேச்சுத் தமிழ் கற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அவ்வாறு தமிழ் கற்க வரும் மாணவர்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். 1. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அயல்நாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள், 2.தமிழை விரும்பி, தமிழரை திருமணம் செய்துகொண்ட பிறமொழி பேசும் அயல்நாட்டவர், 3. தமிழ் நாட்டுடன் தொடர்புடைய அல்லது தமிழ் நாட்டில் வழும் அயல்நாட்டினர் மற்றும் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள், 4. தமிழ் மொழியினை மேம்படுத்திக்கொள்ளவும் தமிழ் இலக்கியம் படிக்கவும் ஆர்வம் உள்ளவர்கள். 5. தமிழ்த் திரைப் படங்களைப் பார்க்க வேண்டும் தமிழ் வசனங்களைப் பேசவேண்டும் என விரும்பம் கொண்டவர்கள். இந்த ஐந்து வகை மாணவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்றர்போல பாடதிட்டங்கள் வடிவமைக்கப்பட்டு ஸ்கைப் மூலமாகப் பாடம் நாடத்தப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்தார்.
இணைய வழியாகத் தமிழ் கற்பிக்கப்படும்போது, மொழி தொடர்பான சிக்கல், நேரம் சார்ந்த சிக்கல்கள், மாணவர்களின் பங்களிப்பு/ ஒத்துழைப்பு, தேவைக்கு ஏற்றார் போல் பாடங்களை வடிவமைத்தல், தொழில் நுட்ப அறிவு/ சிக்கல்கள், பெற்றோர்கள் குறுக்கீடு, மூன்றாம் தரப்பு விமர்சனங்கள் ஆகிய சிக்கல்களையும் எதிகொள்ள வேண்டியுள்ளது என்று மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்குத் தலைமைவுரை ஆற்றிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் உலக அளவில் வாழ்ந்து வரும் தமிழ் குழந்தைகளின் தமிழ்ப் பேச்சுத் திறனையும் தொழில்த் திறனையும் வளர்த்தெடுக்கும் விதமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இணைய வழி பட்டய வகுப்புகளைத் தொடங்கும், குறிப்பாக, பேச்சுத் தமிழ், செய்தியாளர் பயிற்சி, மேடைப் பேச்சு, இலக்கிய படைப்பாக்கமும் திரை இயக்கமும், தமிழிசை, நிகழ்த்துகலைகள் தொடர்பான பட்டயங்களைத் தொடங்கி தொழில் முனைவோர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியினை அயல்நாட்டுத் தமிழர் புலகத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் ஒருங்கிணைத்தர். மேலும் நிகழ்ச்சியில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் ஜெ. செல்வகுமார், தமிழாசிரியர்கள் உமா தென்னரசு, பிரதீபா இம்மானுவேல், முனைவர் குமரகுருதாசன், திரு. அக்கினி பாரதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.