முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019

நிகழ்வு நாள் : 14.12.2019

தமிழிசை வரலாற்றை மீட்டெடுக்கும் வகையிலும், தமிழிசையினை உலகெங்கும் கொண்டு செல்லும் நோக்கிலும், தமிழிசை இயக்கத் தந்தை ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் நூற்றாண்டான இவ்வாண்டில், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து, 2019 திசம்பர் 14, 15 ஆகிய நாள்களில் முதலாவது உலகத் தமிழிசை மாநாட்டை மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தியது.
2019 திசம்பர் 14 சனிக்கிழமை அன்று மதுரை, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவ மாணவிகளின் மங்கள இசையுடனும் வரவேற்பு நடனத்துடனும் முற்பகல் 9 மணிக்கு மாநாடு தொடங்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாட்டின் தொடக்க விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநரும், மாநாட்டின் ஒருங்கிணைப்புத் தலைவருமான முனைவர் கோ .விசயராகவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநரும் இணை ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ப. அன்புச்செழியன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இம்மாநாட்டினைச் சிறப்பாகத் திட்டமிட்டு வடிவமைத்த இம்மாநாட்டின் ஒருங்கிணைப்புச் செயலர் முனைவர் கு. சிதம்பரம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் அவர்கள் நோக்கவுரை ஆற்றினார். சென்னை, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியின் மேனாள் முதல்வர், முனைவர் அமுதா பாண்டியன் அவர்கள் மாநாட்டின் மையப் பொருண்மையுரை ஆற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் மு. கிருஷ்ணன் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்.திரு. அறிவுமதி ஆகியோர் தொடக்கவிழாப் பேருரை ஆற்றினர்.

தொடக்க விழாவைத் தொடர்ந்து, இலங்கை, இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழிசைக் கலைஞர்கள் பங்கேற்றுத் தமிழிசை நடன நிகழ்ச்சிகளையும், பண்ணிசை நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தினர். குறிப்பாகத் தமிழிசை வேந்தர் கோ.ப. நல்லசிவம் குழுவினரின் திருமுறைப் பண்ணிசை; திரு. பாபுவிநாயகம் அமெரிக்கா குழுவினரின் பண்ணிசைப் பாடல்கள்; தலைக்கோலி பரத சூடாமணி சின்னமனூர் அ. சித்ரா குழுவினரின் சிலப்பதிகார நடனம், இலங்காபுரி அவைக்காற்றுக் கலையகத்தின் "தமிழர் நாமும் நவரச வாழ்வும்" தமிழிசை நடனம்; சேலம் பிரபந்தமாலா இசைக் குழுவினரின் திவ்யப்பிரபந்த இன்னிசை; இலங்கை தியாகராஜர் கலைக்கோயில் குழுவினரின் "திரிகோணமலை வில்லூன்றிக் குறவஞ்சி" தமிழிசை நாட்டிய நாடகம்; கலைமாமணி சி. டேவிட் அவர்களின் "தேன்மதுரத் தேனிசை" ; திண்டிவனம் வில்லிசை வேந்தர் பேரா. முனைவர் வேட்டவராயன் குழுவினரின் வில்லிசைப் பாடல்; சென்னை, ஸ்ரீசாகித்ய நாட்டியாலயா குழுவினரின் பாரதியார் பாடல்களுக்குத் தமிழிசை நடனம்; இன்னிசையேந்தல் குரு ஆத்மநாதன் அவர்களின் தேமதுரத் தமிழிசை; கோவை, சங்கரம் நாட்டியப் பள்ளி திருமதி. சஸ்மிதா கே. அரோரா குழுவினரின் வள்ளுவம் வாழ்க்கையானால், தமிழிசை நடனம்; அவினாசி லிங்கேஷ்வரர் கலாசேத்ரா குழுவினரின் பரதநாட்டியம், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவிகளின் மாநாட்டு வாழ்த்துப்பாடல் , திருவண்ணாமலை, சிவபுரம் சிவத்தென்றல் நடனாலயா குழுவினரின் திருவாசக நடனம்; திருப்பூர் பவளக்கொடி கும்மியாட்டக் குழுவினரின் கும்மியாட்டம், கோவை சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம், மதுரை திரு. சு. தங்கவேல் குழுவினரின் கரகாட்டம், மற்றும் பறையிசை நடனம்; கோசைநகரான் தொல்லிசைக் கருவியகம் சார்பில் பழங்காலத் தமிழிசைக் கருவிகளின் கண்காட்சி மற்றும் பழங்காலக் கருவிகளின் இசைச் சங்கமம் ஆகிய தமிழிசைக் கலை நிகழ்வுகள் தொடர்ந்து இரண்டு நாள்களும் கோலாகலமாக நடைபெற்றன. இரவு நிகழ்ச்சியாக ஸ்ரீபொன்னியம்மன் நாடக சபாவினரின் நல்லதங்காள் தமிழிசை நாடகமும் நிகழ்த்தப்பெற்றது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் இருபத்தொரு கலைக்குழுக்கள் சார்பில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழிசைக் கலைஞர்கள் இருபத்து இரண்டு வகையான கலை நிகழ்ச்சிகளை சுமார் இருபத்து மூன்று மணி நேரம் நிகழ்த்தி மாநாட்டின் வெற்றிக்கு வழிவகுத்து வரலாற்றுச் சாதனை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இரண்டு நாள்கள் நடைபெற்ற இம்மாநாடு நான்கு அரங்கங்களில் நடைபெற்றது. முதன்மை அரங்கில் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அரங்குகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளும், நான்காம் அரங்கில் இசைக்கருவிகளின் காட்சியரங்கும் வைக்கப்பட்டு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருநூற்று ஐம்பத்தெட்டுக் கட்டுரையாளர்களில் சுமார் இருநூறு கட்டுரையாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு இருபத்தேழு அமர்வுகளில் தமது ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர். ஆய்வு அரங்கங்கள் தொடர்ந்து இரண்டு நாள்களுமே தனி அரங்குகளில் நடைபெற்றன. இம்மாநாட்டிற்கு வரபெற்றுத் தெரிவுச் செய்யப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு மூன்று தொகுதிகளாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் நூலாக்கம் செய்யப்பெற்று மாநாட்டில் வெளியிடப்பட்டன.
இம்மாநாட்டின் நிறைவு விழாவில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் நிறைவு விழாப் பேருரை ஆற்றினர். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள், தமிழிசை அறிஞர்களுக்கும், தமிழிசை வளர்ச்சிக்குப் பங்களிப்பைச் செலுத்தியவர்களுக்கும் ஆபிரகாம் பண்டிதர் மற்றும் விபுலானந்த அடிகளார் பெயர்களிலும், தமிழிசை ஞானி, இளம் தமிழிசை ஞானி, உலகத் தமிழிசைத் தூதுவர் ஆகிய விருதுகளையும் பங்கேற்புச் சான்றிதழ்களையும் வழங்கி ஆசியுரை வழங்கினார். மாநாட்டின் நிறைவாக, மாநாட்டின் தீர்மானங்களை மாநாட்டின் ஒருங்கிணைப்புச் செயலர் முனைவர் கு. சிதம்பரம், மாநாட்டின் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. அன்புச்செழியன் ஆகியோர் இணைந்து வாசித்தனர்.
இம்மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ஆங்காங், தைவான், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழிசைக் கலைஞர்கள், தமிழறிஞர்கள், தமிழிசை அறிஞர்கள் , தன்னார்வத் தொண்டர்கள், ஆர்வலர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் இம்மாநாடு நடைபெற உறுதுணையாக இருந்த புரவலர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மாநாட்டினைச் சிறப்பித்தனர். இம்மாநாட்டின் இரண்டாவது நாள் 15.12.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று இரவு 7.25 மணிக்கு நிறைவு விழா இனிதே முடிவடைந்தது. இரண்டு நாட்களுமே மதுரை மாநகரம் தமிழிசை விழாக்கோலம் பூண்டு காண்போரை வியக்கச் செய்தது!
மாநாட்டில் இரண்டு நாள்களுமே தமிழர் பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது. மேலும் உலகத் தமிழர்கள் அனைவரும் மாநாட்டின் நிகழ்வுகளைக் கண்டுகளிப்பதற்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் "தமிழ்ச் சாலை" இணையம் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. பொதுமக்கள் மாநாட்டு நிகழ்வுகளைக் கண்டுகளிக்கும் விதமாக, மாநாட்டு அரங்கத்தின் வெளியேயும் மின் திரைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், மாநாட்டின் நிறைவு விழாவில் மாநாட்டின் சுடரொளி ஏற்றப்பட்டு, அதனை அடுத்த மாநாட்டின் அமைப்புக் குழுவிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டு, தற்காலிகமாக அது பொது அமைப்பினரிடம் அச்சுடரொளி ஒப்படைக்கப்பட்டது. மாநாட்டின் நிறைவாகக் கீழ்கண்ட ஒன்பது தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுத் தீர்மானங்கள் :
1. தமிழிசை மாநாடுகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக "உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகம்"(International Association for Tamil Music Research - IATMR ) என்ற அமைப்பை ஏற்படுத்துதல்,
2. தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் (தொடக்க நிலை முதல் மேல் நிலை வரை) தமிழிசையை ஒரு பாடமாகச் சேர்க்க வழிவகைச் செய்தல்,
3. தமிழிசை படித்தவர்களுக்குத் தொடக்கப்பள்ளிகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைச் செய்தல்
4. இசை நூல்களைத் தொகுத்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழிசை ஆய்வு நூலகம் உருவாக்குதல் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழிசை நூல்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் உள்ளவற்றைத் தமிழிலும், தமிழில் உள்ளவற்றை ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்து உலகளாவிய தமிழிசை ஆய்வுக்கு வழிவகை செய்தல்,
5. உலகத் தமிழிசை மாநாட்டை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உலகளாவிய தமிழிசை அமைப்புகளையும் தமிழிசை கலைஞர்களையும் ஒருங்கிணைத்து நடத்துதல், முதல் உலகத் தமிழிசை மாநாட்டில் உருவாக்கப்படும் உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகம் இதற்கு நெறிமுறைகளை வகுத்து வழிகாட்டியாகச் செயல்படவும், இதன்முலம் தமிழ்நாடு அரசின் முழு ஆதரவையும் பெறுவதற்கும் வழிவகை செய்தல்,
6. இசைத் துறையில் சிறந்து விளங்கி, துறை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தவர்களுக்கு ஆபிரகாம் பண்டிதர், வீ.ப.கா.சுந்தரம், விபுலானந்த அடிகள் ஆகியோரின் பெயரில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்க அரசுக்குப் பரிந்துரை செய்தல்,
7. இசைக் கருவிகள் உருவாக்குபவர்களின் நலனைப் பாதுகாக்க நலவாரியம் ஒன்றை தமிழ் நாடு அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் அமைத்து, இசைக்கருவிகள் அழிந்து விடாமல் அவற்றைக் காப்பாற்ற வேண்டியும், பயிற்சிகள் வழங்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்தல்,
8. பழங்குடியின மக்களின் இசைக் கருவிகளை, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் வழியாக ஆவணப்படுத்த தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தல்,
9. தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில், மாவட்டந்தோறும் மார்கழி (ம) சித்திரைத் திங்களில் தமிழிசை விழாவினைக் கோலாகலமாக நடத்தப் பரிந்துரைத்தல்.

மேற்கண்ட ஒன்பது தீர்மானங்களையும் முனைவர் கோ. விசயராகவன், திரு. ச.பார்த்தசாரதி, முனைவர் கு. சிதம்பரம் மற்றும் முனைவர் இரத்தின புகழேந்தி ஆகியோர் முறைப்படுத்தினர்.
மேலும் தமிழிசை மாநாடுகள் தொய்வில்லாமல் தொடருவதற்கு ஏதுவாக அடுத்தடுத்த தமிழிசை மாநாடுகளை நடத்தப்போகும் தலைமைக்குழுக்களிடம் அடுத்த மாநாடு நடக்கும் இடத்தையும் முடிவுசெய்து மாநாட்டிலேயே சுடரொளியைக் கையளிக்கும் பொறுப்பை உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகம் தொடர்ந்து மேற்கொள்ளும். இம்முறை கழகத்தின் சார்பில் முனைவர் கோ. விசயராகவன், முனைவர் கு. சிதம்பரம், திரு ச.பார்த்தசாரதி ஆகியோர் மேற்கொள்வர். புதியதாக உருவாக்கப்படவுள்ள உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகத்திற்கு விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அடுத்தடுத்த மாநாடுகள் நடைபெறும் இடங்களைத் தெரிவுச் செய்யும் அதிகாரம், சுடரொளியினைக் கையளிக்கும் அதிகாரம் உள்பட முழு அதிகாரமும் உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகத்திற்கு முதலாவது உலகத் தமிழிசை மாநாட்டினை முன்னெடுத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழங்க வழிவகை செய்தல் போன்ற முடிவுகளும் மாநாட்டில் எடுக்கப்பட்டன. மேலும், முதலாவது உலகத் தமிழிசை மாநாட்டில் பயன்படுத்திய இலச்சினை தொடர்ந்து இவ்வமைப்பால் நடத்தப்படும் தமிழிசை மாநாடுகளுக்கு எவ்வித மாற்றமுமின்றி பயன்படுத்தி அதன் தொடர்ச்சியினையும் வரலாற்றினையும் கட்டிகாக்கவும் வழிவகைச் செய்கிறது.
அடுத்த மாநாடு :
தமிழிசையை உலகெங்கும் கொண்டு செல்வதற்கு ஏதுவாகக் குறைந்தது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடுகள் நடத்திட முதலாவது உலகத் தமிழிசை மாநாட்டுத் தீர்மானம் வழிவகுக்கிறது. அதன்படி அடுத்த மாநாடு மலேசியா அல்லது வேறு ஏதாவது ஒரு அயல்நாட்டில் நடத்த உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகம் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது. மேலும், மேற்கண்ட செயற்பாடுகளுக்கு உலகத் தமிழிசை இயக்கமும் உறுதுணையாக நிற்கும்.
தமிழிசையால் உலகை இணைப்போம்!
(செய்தித் தொகுப்பு : முனைவர் கு. சிதம்பரம், மாநாட்டு ஒருங்கிணைப்புச் செயலர்,முதலாவது உலகத் தமிழிசை மாநாடு – 2019)