மாறி வரும் உலகச்சூழலில் தமிழ் கற்றல்-கற்பித்தல்: சவால்களும் தீர்வுகளும்

நிகழ்வு நாள் : 27.09.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
மற்றும்
எட்யுரைட் அறக்கட்டளை
தமிழாசிரியர் மதியுரையகம்
இணைந்து நடத்தும்
”மாறி வரும் உலகச்சூழலில் தமிழ் கற்றல்-கற்பித்தல்: சவால்களும் தீர்வுகளும்”
பள்ளித் தமிழாசிரியர்களுக்கான பயிலரங்கம்

தமிழ் வளர்ச்சித்துறையின் செம்மையான வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவில் தமிழ்க்கல்வியைப் பரப்பி வரும் எட்யுரைட் அறக்கட்டளை இணைந்து தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிலரங்கினை செப்டம்பர் 26, 27 ஆகிய நாட்களில் நடத்தின. தற்காலச்சூழலில் தமிழ்க்கல்வி எதிர்கொண்டுள்ள அறைகூவல்களும் அதை எதிர்கொள்ளும் முறைமைகளையும் மையமிட்டு இப்பயிலரங்கம் நடத்தப்பட்டது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 80 தமிழாசிரியர்கள் மற்றும் 20 உலகத் தமிழாராய்ச்சி ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்கள் பங்கேற்ற இப்பயிலரங்கில், தமிழ்க்கல்வியின் வளர்ச்சிப்போக்கு, தகவல்-ஒலி/ஒளிபரப்பு ஊடகங்களில் தமிழ் எதிர்கொண்டுள்ள மொழிக்கலப்புகள், வகுப்பறையில் மொழிப்பயன்பாட்டில் பிற மொழிகளின் குறுக்கீடு, நடைமுறை இலக்கணத்தை எளியமுறையில் எடுத்துச்செல்லல், தமிழ் கற்பித்தலில் சிறார் இலக்கியத்தின் பங்களிப்பு, அயல்நாடுகளில் தமிழ் கற்பித்தல் பணிகள், மொழி கற்பித்தலில் வரலாறு-பண்பாடு ஆகியவற்றின் தேவை என வெவ்வேறு தலைப்புகளில் கல்விநிலைப் பின்புலம் கொண்ட ஆளுமைகள் பங்கேற்பாளர்களுடன் கருத்துப்பகிர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்த்தினர்.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநருமான முனைவர் கோ.விசயராகவன் தலைமையில் திட்டமிடப்பட்ட இப்பயிலரங்கில் திரு செந்தலை ந.கவுதமன், ஊடகவியலாளர் ஜேம்ஸ் வசந்தன், தமிழாசிரியர் ஹரிக்குமார், வானொலி அண்ணா ஞானப்பிரகாசம், தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், பேராசிரியர் இரா.குறிஞ்சிவேந்தன், பேராசிரியர் ஆ.மணவழகன் ஆகியோர் உரையாடல்களை நிகழ்த்தினர்.

பயிலரங்கின் நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றிய இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், தமிழாசிரியர்களுக்கான இப்பயிலரங்கத்தினைத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், எட்யுரைட் அறக்கட்டளையும் இணைந்து நடத்த திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தார். உலகத்தமிழர்களின் வேராக விளங்கும் தாய்த்தமிழகத்தில் தமிழ்க் கல்வி தொய்வில்லாமல் தொடர்ந்தால் தான், அமெரிக்கா உள்ளிட்ட அயலக நாடுகளிலும் தமிழ் செழிப்புடன் இருக்கும் என்று இந்நிகழ்வை ஒருங்கிணைத்த எட்யுரைட் அறக்கட்டளைத் தலைவர் கீர்த்தி ஜெயராஜ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் அவ்வை அருள், மதுரை உலகத் தமிழ்ச்சங்க மேனாள் இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், ஹார்வேர்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைத் தலைவர் மருத்துவர் ஜானகிராமன், பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் செல்வக்குமார், முனைவர் ஜானகி ஆகியோர் பங்கேற்றனர்.