உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை சார்பில் “கலை, பண்பாடு, மொழி, சமூகம் ஆகியவற்றில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு" எனும் பொருண்மையில் இருநாள் தேசியக் கருத்தரங்கத்தின் நிறைவு விழா

நிகழ்வு நாள் : 14.06.2019

• ஆண்டுகள் கடந்தாலும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் ஆற்றல் பெற்ற தலைவர் எம்.ஜி.ஆர். . .
• பல்வேறு மொழிகளில் எம்.ஜி.ஆர். அவர்களின் கருத்துகளை மொழிபெயர்த்திட ஆய்வு மாணவர்கள் முன்வரவேண்டும். . .
எம்.ஜி.ஆர். கருத்தரங்க நிறைவு விழாவில்
- மாண்புமிகு அமைச்சர் க. பாண்டியராசன் பேச்சு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை சார்பில் “கலை, பண்பாடு, மொழி, சமூகம் ஆகியவற்றில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு" எனும் பொருண்மையில் இருநாள் தேசியக் கருத்தரங்கத்தின் நிறைவு விழா இன்று 14.06.2019 – வெள்ளி பிற்பகல் நடைபெற்றது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் பா. இராசா அவர்கள் வரவேற்புரையாற்றிட, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையேற்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி (ம) ஆட்சிமொழிப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திருமிகு க.பாண்டியராசன் அவர்கள் கட்டுரையாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கியும் “Puratchi Thalaivar MGR’s Contribution to Tamil” என்ற ஆங்கில நூலை வெளியிட்டும் நிறைவு விழா உரையாற்றினார். அவர்தம் உரையில்,
உலகில் உத்தமமான ஒரு தலைவர் எம்.ஜி.ஆர். அவரைப் போலொரு தலைவரை உலகினில் நான் கண்டதில்லை. இவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும் இந்த இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் ஆற்றல் பெற்ற தலைவர். புரட்சித் தலைவர் அவர்கள் தன் திரைப்படப் பாடல்களில் எப்படி ஆட்சி செய்ய வேண்டும்? ஒரு மனிதன் எவ்வாறு வாழ்தல் வேண்டும்? என்ற கேள்விகட்கு விடையினைத் தந்தும் தந்தவாறே வாழ்ந்தும் காட்டினார் என்பதே குறிப்பிடத்தக்க செய்தியாகும். அவரின் திரையிசைப் பாடல்கள் எனக்கு உந்துசக்தியளிக்கின்றன. மக்களின் மனங்களில் அவரது திரையிசைப் பாடல்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. குறிப்பாக, “அச்சம் என்பது மடமையடா”, “நான் ஆணையிட்டால்” போன்ற பாடல்கள் தவிர்க்க இயலாதவை. திரைப்படம் மூலமாகச் சமூகத்திற்கு நல்வழிகாட்டிய தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே. சாதியினை விரும்பாத சரித்திர நாயகன். பல தடைகளை, எதிர்ப்புகளைத் தாண்டி வளர்ந்த தலைவர். இந்த எம்.ஜி.ஆர். ஆய்விருக்கையின் மூலமாக எம்.ஜி.ஆரைப் பற்றிய ஆய்வுகள், பல வகையான நூல்கள் வெளிவரும் என எண்ணுகிறேன். மேலும், இந்த ஆய்விருக்கையானது வலுப்படுத்தப்படும் எனவும் இதன் வாயிலாகக் கூறுகின்றேன். திருக்குறள் என்னும் அரிய நூல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதைப் போல எம்.ஜி.ஆர் அவர்களின் கருத்துகளும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தல் வேண்டும். இதனை ஆய்வு மாணவர்கள் முன்னெடுத்துச் செல்லுதல் வேண்டும். இளைஞர்கள் எம்.ஜி.ஆரின் சமூகத் தொண்டுகள் குறித்து முழுவதுமாக உய்த்து அறிதல் வேண்டும் என்று கூறித் தனது உரையினை நிறைவு செய்தார்.
தொடர்ந்து ஆய்விருக்கைப் பொறுப்பாளர் பேரா. ம.செ.இரபிசிங் அவர்கள் நன்றி நவின்றார். ஆய்விருக்கை ஆய்வாளர் முனைவர் ஈ.விசய் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார். இக்கருத்தரங்கத்தின் நான்காவது அமர்வில் முனைவர் அ. சதீஷ் அவர்கள் தலைமையில் “புரட்சித் தலைவரின் கருத்தியல் புலப்பாட்டு நெறி” எனும் தலைப்பில் முனைவர் நா.சுலோசனா, “புரட்சித் தலைவர் வாழ்வில் கடைப்பிடித்த பண்பாட்டுக் கூறுகள்” எனும் தலைப்பில் முனைவர் மு. சரளாதேவி, “பொன்மனச் செம்மலின் தமிழ்ப்பணி” எனும் தலைப்பில் முனைவர் தெய்வ.சுமதி ஆகியோரும் ஐந்தாம் அமர்வில் முனைவர் து.ஜானகி அவர்கள் தலைமையில், “தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆரின் பங்களிப்பு” எனும் தலைப்பில் கவிஞர் இரா.முருகன், “மக்கள் திலகத்தின் திரையுலகச் சாதனைகளும் சமுதாயச் சிந்தனைகளும்” எனும் தலைப்பில் முனைவர் சு.அட்சயா ஆகியோரும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கிச் சிறப்பித்தனர். இந்நிகழ்வில் நிறுவனப் பேராசிரியர்கள், முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பற்றாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







படச்செய்தி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை சார்பில் 14.06.2019 அன்று நடைபெற்ற “கலை, பண்பாடு, சமூகம், மொழி ஆகியவற்றில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு” எனும் பொருண்மையில் நடந்த அகில இந்தியக் கருத்தரங்கின் நிறைவு விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி (ம) ஆட்சிமொழிப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திருமிகு க.பாண்டியராசன் அவர்கள் “Puratchi Thalaivar MGR’s Contribution to Tamil” என்ற ஆங்கில நூலை வெளியிட, எம்.ஜி.ஆர். ஆய்விருக்கைப் பொறுப்பாளர் பேரா. ம.செ.இரபிசிங் பெற்றுக்கொண்டார் உடன் பேரா.ப.சிவராசு, பேரா. பா.இராசா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன், மற்றும் திரு. கூரம் துரை ஆகியோர்.