புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை சார்பில் “கலை, பண்பாடு, மொழி, சமூகம் ஆகியவற்றில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு" எனும் பொருண்மையில் இருநாள் தேசியக் கருத்தரங்கத்தின் தொடக்க விழா

நிகழ்வு நாள் : 13.06.2019

1965 தமிழ்மொழி காக்கும் போராட்டத்திற்கும்
1967-ல் தி.மு.க. வெற்றிபெறுவதற்கும் காரணமானவர் எம்.ஜி.ஆர். என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்...
எம்.ஜி.ஆர். கருத்தரங்கத் தொடக்க விழாவில்
- முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் பேச்சு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை சார்பில் “கலை, பண்பாடு, மொழி, சமூகம் ஆகியவற்றில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு" எனும் பொருண்மையில் இருநாள் தேசியக் கருத்தரங்கத்தின் தொடக்க விழா இன்று 13.06.2019 – வியாழன் காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
ஆய்விருக்கைப் பொறுப்பாளர் பேரா. ம.செ.இரபிசிங் அவர்கள் வரவேற்புரையாற்றிட, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையேற்க, மேனாள் மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திருமிகு சி. பொன்னையன் அவர்கள் கருத்தரங்கத் தொடக்கவுரையாற்றினார். அவர்தம் உரையில், இன்றைக்கு இருமொழிக் கொள்கை தமிழகத்தில் இருக்கிறதென்றால் புரட்சித்தலைவர் மொழிப்போராட்டத்திற்காக உதவியதும் அதற்கு நிதியுதவி செய்ததுமே காரணம். அப்போராட்டத்தின்போது தன்னுடன் இருந்தவர்களின் வாழ்வினைப் போற்றிப் பாதுகாத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். தமிழகத்தினை யார் ஆளப் போகிறார்கள் என்று முடிவுசெய்யும் திறமை படைத்தவர் புரட்சித்தலைவர். பேரறிஞர் அண்ணா அவர்களின் மனத்தினைக் கவர்ந்தவரும் அவரே. பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு முதலமைச்சர் இருக்கையில் அமரக் காரணமானவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். அத்தகைய திறமையும் உயர்ந்தகுணமும் புரட்சித்தலைவருக்கு உண்டு. ஏழை, எளிய மக்களுக்காகவே, எம்.ஜி.ஆர். அவர்கள் தனது திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பின் வாயிலாக ஏழை, எளியவர்களின் வாழ்வில் விளக்கேற்ற முடியும் என்று திண்ணப்படுத்தியவர் புரட்சித்தலைவர் ஒருவரே. கிராமத்துப் பிள்ளைகளும் எழுத்தறிவு இல்லாத பிள்ளைகளும் தமிழ்மொழியினைத் தெரிந்து கொள்ள வழிவகை செய்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அதற்கு முழுமுதற்காரணமாய் அமைந்தது மிகப்பெரு நிதியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருப்பெற்ற தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகும். மாணவர்களுக்குக் கல்விக்காக நிதி ஒதுக்கவேண்டிய சூழல். அந்தச் சூழலில் மதுபானம் மூலமாக வரும் வருவாயினைக்கொண்டு நிதிதிரட்டல் வேண்டும் என்கிற கட்டாயம், அத்தகைய கட்டாயத்தினையும் தகர்த்து அந்த மதுபான வருவாயின் மூலமாக வரும் வருவாயில் பிள்ளைகள் படிக்கக்கூடாது. எனது திரைத்துறை வருவாயில் மாணவர்களைப் படிக்க வைக்கிறேன், என்று கூறிப் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சபதம் ஏற்றார். கல்வி, சமூகம், அரசியல் என அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர் எம்.ஜி.ஆர். பசி என்ற நிலைமையில் உள்ள மாணவர்களுக்குத் தகுந்த நிதியினை ஒதுக்கி ஏழை மாணவர்களின் பசியினைப் போக்கிய பெருமை புரட்சித் தலைவர் அவர்களையே சேரும். பகைவரையும் நண்பனாகச் சேர்த்துக்கொள்ளும் உயர் தன்மை, எல்லார்க்கும் நன்மை செய்யும் மனம், தான் சார்ந்த மொழியின் மீது நாட்டம் ஆகிய தன்மைகள் அனைத்தும் ஒருங்கே பெற்றவர் புரட்சித் தலைவர் ஒருவரே. என்று புரட்சித்தலைவர் அவர்களுக்குப் புகழாராம் சூட்டினார். அதனைத் தொடர்ந்து,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகர் திரு. இரா.பெருமாள்சாமி அவர்கள் நன்றி நவின்றார். இக்கருத்தரங்கத்தின் முதல் அமர்வில் பேரா. க. இளமதி சானகிராமன் அவர்கள் தலைமையில் “மக்கள் மனத்தில் நின்றவர் செயலால் வென்றவர்” எனும் தலைப்பில் பேரா. ப. சிவராசு, “டாக்டர் எம்.ஜி.ஆரின் பன்முக ஆளுமை” எனும் தலைப்பில் பேரா. ஜெ. தேவி, “தமிழ் வளர்ச்சிக்கு, எம்.ஜி.ஆரின் பங்களிப்பு” எனும் தலைப்பில் பேரா. மு. பாண்டி ஆகியோரும் இரண்டாவது அமர்வில் பேரா. மு. பாண்டி அவர்கள் தலைமையில், “எம்மனத்தார்க்கும் பொன்மனச் செம்மல்” எனும் தலைப்பில் முனைவர் கோ. விசயராகவன், “பண்பாட்டுச்சிகரம் எம்.ஜி.ஆர்” எனும் தலைப்பில் முனைவர் க. இளமதி சானகிராமன், “மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்” எனும் தலைப்பில் திரு. ஆவடிக் குமார் ஆகியோரும் மூன்றாவது அமர்வில் முனைவர் பெ. செல்வக்குமார் அவர்கள் தலைமையில் “அநீதியான வெப்ப மிகுதியை அகற்றிக் காத்திடும் நீதியாகிய மழை டாக்டர் எம்.ஜி.ஆர்.” எனும் தலைப்பில் முனைவர் செ. பாண்டியம்மாள், “எம்.ஜி.ஆர். திரைப்பாடல்களில் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள்” எனும் தலைப்பில் முனைவர் ப. கிருஷ்ணமூர்த்தி, “மக்களின் கடவுள் எம்.ஜி.ஆர்” எனும் தலைப்பில் முனைவர் அ. ஜனர்த்தலி பேகம் ஆகியோரும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கிச் சிறப்பித்தனர். இந்நிகழ்வில் நிறுவனப் பேராசிரியர்கள், முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பற்றாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.