பன்னாட்டுக் கருத்தரங்கம்: பொருண்மை: ”தொல்லியல் சான்றும் தமிழர் பண்பாடும்” நாள்:27.04.2019

நிகழ்வு நாள் : 27.04.2019

பன்னாட்டுக் கருத்தரங்கம்:
பொருண்மை: ”தொல்லியல் சான்றும் தமிழர் பண்பாடும்” நாள்:27.04.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழும் (IJTLLS) இணைந்து "தொல்லியல் சான்றும் தமிழர் பண்பாடும்" என்னும் பொருண்மையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 27.04.2019 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தியது.
நிகழ்வில், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலப் பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அனைவரையும் வரவேற்று கருத்தரங்க நோக்கவுரையாற்றினார். அப்போது அவர் பேசியது தமிழரின் தொன்மைக்குப் பழந்தமிழ் இலக்கியங்களைச் சான்று கூறுகிறோம். அவற்றிற்கெல்லாம் வரலாற்று ஆவணங்களாகத் தொல்லியல் அகழாய்வுகளில் கிடைத்த உலோகங்கள். நாணயங்கள், பானை ஓடுகள், மதுசாடிகள், புதைகுழிகள், மக்களின் பயன்பாட்டுப் பொருள்கள் , வேளாண்மை செய்ததற்கான அடையாளங்கள் இவையாவும் தமிழரின் தொன்மையை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதான தொன்மையுடையது என்பதைத் தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. தமிழர் வாழ்ந்த கீழடி முதல் மக்களின் புதைகுழிகள் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூர், பொருந்தல், அரிக்கமேடு போன்ற இடங்களில் அகழப்பட்ட பொருள்கள். செப்பேடுகள், கல்வெட்டுகள். ஓலைச்சுவடிகள் இவையெல்லாம் தமிழரின் பண்பாட்டையும் தொன்மையையும் பறைசாற்றும் ஆவணங்களாகத் திகழ்கின்றன. இதை எதிர்கால தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல இதுபோன்ற கருத்தரங்கங்கள் நடத்தப்படவேண்டும் எனும் கருத்தை வைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர், முனைவர் கோ. வி சயராகவன் தலைமையேற்று நிகழ்வினைத் தொடங்கிவைத்தார். வாழ்த்துரை வழங்கி 120 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவையை மேனாள் தொல்லியல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் முனைவர் சீ. வசந்தி வெளியிட செந்தமிழ் அறக்கட்டளையின் தலைவர் கவிஞர் சுரா பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியை முனைவர் டினோசா இராசேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். அவர் பேசும்போது தமிழர் தொன்மையையும் பண்பாட்டையும் , வரலாற்றையும் தாய்த் தமிழ் இலக்கிய இலக்கணங்கள் வாயிலாகவும், அகழாய்வுகள் வாயிலாகவும் நாங்கள் அறிந்துகொண்டோம். இதேபோல் இலங்கைத் தமிழரின் வரலாறும் பண்பாடும் தொன்மையும் இன்னும் முறையாக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூ றினார். தொல்லியல் சான்றுகளையும், தொல்லியல் வரலாற்றையும் இனிவரும் தலைமுறையினருக்குத் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறைத் தலைவர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கி நிறைவு விழாப் பேருரை ஆற்றினார். கல்வெட்டியல் அறிஞர் குழந்தைவேலன், முனைவர் தி. பரிமளா, முனைவர் அம்பை ஆ.பாலசரசுவதி, முனைவர் விமல், புலவர் பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் ,தமிழார்வலர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தனர்.
நிறைவாக தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழின் ஆசிரியர் முனைவர் த. மகேஸ்வரி நன்றியுரை ஆற்றினார்.