06.03.19 மற்றும் 07.03.19 ஆகிய இரு தினங்களில் 'உலகத் தமிழர் வணிகமும் தொன்மையும்' என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 06.03.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 06.03.19 மற்றும் 07.03.19 ஆகிய இரு தினங்களில் 'உலகத் தமிழர் வணிகமும் தொன்மையும்' என்ற தலைப்பில் முதல் நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலக மகளிர் மன்றத்துடன் இணைந்து சிறப்பாக நடந்து முடிந்தது. இக்கருத்தரங்கு நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் ஐயா தலைமையில், அயல்நாட்டுத் தமிழர் புல உதவிப் பேராசிரியர் முனைவர் து.ஜானகி அவர்களின் ஒருங்கிணைப்பில், கடலியல் ஆய்வாளர், ஐயை தோற்றுநர் திரு. பாலசுப்பிரமணி அவர்கள் மற்றும் ஐயை மலர்விழி பாஸ்கரன் (மலேசியா) அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பில் நடைப்பெற்றது. இக்கருத்தரங்கின் நோக்கம், “தமிழர்கள் வணிகம் செய்கின்ற நாடுகள், அவர்கள் வாழும் நாடுகளைப் பற்றியும் உலகலாவிய வணிகப்பார்வை, வணிக மேலாண்மை. உலகமயமாக்கல் சூழலில் வணிக மொழி போன்றவற்றை அறிந்துகொள்ளும் பயன் நோக்கியும் தமிழர் தம் வணிகத்தின் தொன்மையும் சிறப்பும் பற்றியும் மீளாய்வு செய்யும் நோக்கில் பொழிவுகள் இருந்தன. அன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஐயை உலகத்தமிழ் மகளிர் மன்றத்தின் இரண்டாவது ஒன்றுகூடலும் நடைபெற்றது. இம்மாநாட்டில் துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி, மலேசியா, இலங்கை, பப்புவா நீயு கினியா போன்ற நாடுகளில் இருந்தும் மதுரை, திருச்சி, சேலம், பகுதிகளிலிருந்தும் பன்முகத்திறன் கொண்ட பெண்கள் மற்றும் இலக்கியம், இலக்கணம், மொழியியல், தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர்கள் பலர் பங்குப்பெற்றனர். இப்பொருண்மை சார்ந்து சுமார் 40 ஆய்வுக்கட்டுரைகள் வரப்பெற்றன. 35 கட்டுரைகள் வாசிக்கப்பட்டது. இரண்டாம் நாளில் அயல்நாட்டுத் தமிழர் புலம் (07.03.19) வியாழனன்று தொல்லியல் மற்றும் கல்வெட்டியலில் வணிகம், வணிக மரபு , வணிக மொழி தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கபட்டது. இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் பொழிவுகள் நிகழ்த்தி நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் உற்றுநோக்கி கருத்துரையும் வாழ்த்துரையும் வழங்கினார் மொழியியல் பேராசிரியர் வீ. ரேணுகாதேவி அவர்கள். நிறைவு விழாவில் இயக்குநர் அவர்கள் பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கியதும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.