தமிழ்த்தாய் 71 பெருவிழா (பிற்பகல்)

நிகழ்வு நாள் : 24.02.2019

தமிழ்த்தாய் 71 பெருவிழா (பிற்பகல்)

தமிழ்ப் புத்தகங்களை நேசித்து வாசிக்கும் இலக்கிய நெஞ்சம் கொண்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
- தமிழாய்வுப் பெருவிழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 71ஆவது பிறந்த நாளான 24.02.2019 பிற்பகல் 02.30 மணிக்கு 71 அரிய நூல்கள் மற்றும் 71 ஆய்வு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் முன்னிலை வகித்தார். நிறுவனப் பதிப்புத்துறைத் தலைவர் முனைவர் ஆ.தசரதன் வரவேற்றார். இந்நிகச்சியில் கலந்துகொண்ட மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் அவர்கள் நூல்களை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். அவர் சிறப்புரை ஆற்றும்போது,
“தமிழ்த்தாய் -71 தமிழாய்வுப் பெருவிழா மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டைப் போற்றும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கொண்டாடப்படுவது வாழ்த்துதற்குரியது. ஐந்து நிமிடம் ஒருவரோடு பேசினாலும் அவரது குண நலனை முழுமையாக அறிந்துகொள்ளக் கூடிய நுட்பமானபார்வை மாண்புமிகு அம்மா அவர்களிடம் இருந்தது. தமிழ் மக்களுக்காக அவர் ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்ததை நன்கு உணர்ந்தவன் நான். உலகளாவிய வளர்ச்சியைத் தமிழ்மொழிக்குத் தரவேண்டும் என்ற எண்ணம் புரட்சித் தலைவிஅம்மா அவர்களிடம் இருந்தது. அதனால்தான் மதுரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட உலகத் தமிழ்ச்சங்கத்தைப் புத்துயிர்ப்புச் செய்வதற்காக 100கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்தார். மொழி வளர்ச்சிக்கான நலத்திட்டச் செயல்பாடுகளில் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தை அவரிடம் காண முடிந்ததது. தமிழ்ப்புத்தகங்களை நேசித்து வாசிக்கும் தமிழ் உள்ளம் கொண்டவராக புரட்சித்தலைவிஅம்மா அவர்கள் திகழ்ந்தார்கள். நாம் புரட்சித்தலைவி அம்மா அவர்களைக் காணச் செல்லும்போது பூங்கொத்துகளோடு செல்லாமல் நல்ல புத்தகங்களோடு தான் செல்வேன். அப்படிப்பட்ட தமிழ் இலக்கிய நெஞ்சமான அம்மா அவர்களை அவரது பிறந்த நாளாகிய இந்தத் திருநாளில் நன்றிப்பெருக்கோடு நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். இந்த இனிய தினத்தில் 71 ஆய்வு நூல்களையும் அரிய நூல்களையும் வெளியிட்டுத் தமிழ்ப் பெருவிழாவாகக் கொண்டாடுவது மிகவும் பொருத்தமானதாகும். இந்த நாள் இதய தெய்வத்தின்உதய நாள்.எங்கள் இதயங்களுக்கு இனிய நாள். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பிறந்த நாளில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பதிப்புத்துறை மேலும் பல நல்ல நூல்களை வெளிக்கொணரவேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டு பேசினார்.
வெளியிடப்பட்ட நூல்களின் முதற்படிகளைப் பெற்றுக்கொண்ட மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை மேனாள் அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தாம் முன்பே தலைமை ஏற்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்டு வாழ்த்திப் பேசினார். நிறுவன நூலகர் திரு. இரா. பெருமாள்சாமி நன்றி நவின்றார். தமிழார்வலர்கள், நிறுவன ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், நிறுவனப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தன்னை அம்மா என்று அழைப்பதையே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெருமையாகக் கருதினார்கள்
- மேனாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் அவர்களின் பேச்சு
தாய்த்தமிழை வளர்ப்பதில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். தமிழகத்தின் தலை நகரம் சென்னை. அதனைப் போல் தமிழுக்கென ஒரு தலைநகரம் இருக்குமென்றால் அது தரமணியில் அமைந்து அருந்தமிழை வளர்த்துக் கொண்டிருக்கும் உலகத் தமிழாராய்சி நிறுவனம்தான் என்பதில் எவ்வித மாறுபாடும் இல்லை. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்து இருக்கிறார்கள். அவர்களின் பொற்கால ஆட்சியில் தமிழுக்கென எண்ணற்ற திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். மாண்புமிகு அம்மாவைப் போல் தமிழுக்காகத் தொண்டு செய்தவரைக் காணவியலாது. அவருடைய இந்தப் பிறந்த நாளில் தாய்த் தமிழை வளர்த்துவரும் ஆன்றோர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

தமிழனாகிய ஒவ்வொருவரும் தாய்த்தமிழைக் கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். தமிழைப் படித்தறிவதன் மூலமாகப் பேச்சுத்திறனை வளர்ப்பதோடு தமிழை அறிந்து கொள்வதன் மூலமாகப் பேச்சுத் திறமையால் உலகை வழி நடத்துதல் வேண்டும். பேச்சு என்பது கேட்போர் மனத்தைக் கட்டிப் போடும் வகையினில் அமைதல் வேண்டும்.
இந்த நிகழ்விலே ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன் நண்பர்களே, தமிழை வளர்த்தவர்கள் எவரும் உயர்ந்த நிலையினை அடைவர் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. மாண்புமிகு அம்மா அவர்கள் இன்று நம்மிடம் இல்லை. இருப்பினும் அவர் விட்டுச் சென்ற கொள்கைகள் நம்மிடையே அச்சாணியாக இருக்கின்றன. இந்தியாவிலேயே ஒரு பெண் முதல்வர் அதிகக் காலம் ஆட்சியில் இருந்திருக்கிறார் என்றால் அவர் மாண்புமிகு அம்மா அவர்கள்தான். அம்மா என்று அனைவரும் அழைப்பதைத்தான், மாண்புமிகு அம்மா அவர்கள் பெருமையாகக் கருதினார்கள். அம்மா அவர்களைப் பார்த்து அனைவரும் ஊக்கத்தோடு செயல்படுதல் வேண்டும். தங்கத்தாரகை அம்மா அவர்கள் பிறந்த நாளிலே ஊக்கத்தோடு செயல்படுவோம் என உறுதி ஏற்போம் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்!