தமிழ்த்தாய் 71 பெருவிழா (முற்பகல்)

நிகழ்வு நாள் : 24.02.2019

தமிழ்த்தாய் 71 பெருவிழா (முற்பகல்)
மக்களால் நான், மக்களுக்காகவே நான்... என்று வாழ்ந்து சமூகக் கடமையாற்றியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்

தமிழ்த்தாய் 71 பெருவிழாவில் - கவிஞர் முத்துலிங்கம் பேச்சு

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு. சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மயூரி நிகழ்த்துக்கலை கழகத்தைச் சார்ந்த மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் முற்பகல் நிகழ்வுகளாக நடைபெற்றன. புரட்சித்தலைவி அம்மா அவர்களைப்போல் வேடம் புனைந்த சிறுமியின்பரதநாட்டிய நிகழ்வும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 71 கவிஞர்கள் கலந்துகொண்ட “அனைத்தும் நீ ஆனாய் அம்மா!" என்னும் தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் ஏர்வாடி எஸ்.இராதாகிருட்டிணன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். கவிஞர் பாரதி சுகுமாரன்,தர்ஷிணி மாயா, சட்ட.முனீஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் வாழ்த்துரை வழங்கிக் கவியரங்கத்தைத் தொடங்கிவைத்தார். அவர் பேசும்போது, “மலர்களில் சிறந்தது தாமரை; நதிகளில் சிறந்தது கங்கை; மாதங்களில் சிறந்தது மார்கழி; மனிதர்களில் சிறந்தவர் எம்.ஜி.ஆர். எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்திருக்கலாம். தலைவர் என்னும் பெயரில் பொய்யாகக் கூட நடித்திருக்கலாம். யாருக்காக வாழ்கிறோம் என்பது கூடத் தெரியாமல் தலைவர் என்னும் முகமூடியை அணிந்திருக்கலாம். ஆனால், மக்களால் நான்; மக்களுக்காக நான் என்ற கொள்கையோடு வாழ்ந்து சமூகப்பணிஆற்றிச் சரித்திரப் புத்தகத்தில் இடம் பிடித்தவர் தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தடுக்க வேண்டிய சமூகக் கடமை ஒரு மக்கள் தலைவருக்கு அடையாளமாக இருக்கிறது. அத்தகைய சமூகக் கடமைகளை சிறப்பாகச் செய்துமுடித்த மக்கள் தலைவர்களில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்அவர்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தையும் அம்மா என்ற மூன்றெழுத்தையும் தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் பெண்கள் முன்னிலைப் படுத்தப்பட்டார்கள்.அவர்களுக்கான திட்டங்கள் முழுவீச்சில் நிறைவேற்றப்பட்டன. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் காலத்தால் அழியாத திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் திட்டத்தை அம்மா அவர்கள் விரிவுபடுத்தினார்கள். இதனால் எண்ணற்ற தகுதிபடைத்த தமிழ் அறிஞர் பெருமக்கள் விருதுகள் பெற்றதுடன் புத்துணர்ச்சியுடன் தமிழ்ப்பணிஆற்றி வருகின்றனர். தஞ்சாவூரில் தமிழுக்கெனத் தனிப்பல்கலைக்கழகத்தைப் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கொண்டுவந்தார்கள். தமிழின் வளர்ச்சி வரலாற்றில் தனிப்பெரும் முயற்சியாகத் தமிழ்ப்பல்கலைக்கழகத் தோற்றம் அமைந்தது. அந்தநெறியின் வழியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களும் தமிழ் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாடுகள் தமிழ்மொழியின் வளர்ச்சிப்பாதையில் முக்கிய பதிவுகளாகும்” என்று குறிப்பிட்டார்.