கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள் ஆய்வடங்கல் உருவாக்கம்

நிகழ்வு நாள் : 25.09.2026

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து 25.09.2026 அன்று "கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள் ஆய்வடங்கல் உருவாக்கம்" என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கமும் நூல் வெளியீடும் சாத்தூர் கல்லூரியில் நடைபெற்றன. கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் பி. ஸ்ரீதேவி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் முதல்வர் பேரா.முனைவர் கி.கிருஷ்ணவேணி அவர்கள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துத் தலைமையுரையாற்றினார். சாகித்ய அகாதமி விருதாளர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களும் கரிசல் இலக்கியக் கழகத்தின் செயலாளர் மருத்துவர் த.அறம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். கருத்தரங்கத்தின் நோக்கத்தைச் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியரும் கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் நா.சுலோசனா அவர்கள் கருத்தரங்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வடங்கலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு கருத்தரங்கினைச் சிறப்பித்தனர். கருத்தரங்கத்தின் நிறைவாகக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ச.கீர்த்தனா அவர்களின் நன்றியுரையுடன் கருத்தரங்கம் இனிதே நிறைவுபெற்றது.