அறிஞர்கள் அவையம் நிகழ்வு - பதினொன்று: நாட்டார் வழக்காற்றியல்

நிகழ்வு நாள் : 23.02.2026

தமிழ்நாடு அரசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆய்வுகளில் இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் நிகழவேண்டியவை குறித்தும்" அறிஞர்கள் உரையாடும் களமாக "அறிஞர்கள் அவையம்" உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு 29.05.2025 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு பத்து நிகழ்வுகள் முடிந்த நிலையில், தற்போது பதினொன்றாவது நிகழ்வாக “நாட்டார் வழக்காற்றியல்: நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்” என்ற பொருண்மையிலான கலந்துரையாடல் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத் தரைதளத்தில் அமைந்துள்ள மாநாட்டுக் கூடத்தில் இன்று (23.02.2026) காலை 10.00 மணிக்குத் தொடங்கி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழிலக்கியம் (ம) சுவடியியல் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம் அவர்கள் நோக்கவுரை ஆற்றினார்.

தொடர்ந்து, பேராசிரியர் ஆறு. ராமநாதன் அவர்கள் ‘தமிழர் வழிபாட்டு மரபுகள் - ஆவணப்படுத்தலும் ஆராய்தலும்’ எனும் பொருண்மையிலும், திரு. க. கஜேந்திரன் அவர்கள் ‘பெருநகர் சார் வழக்காறுகள்: கானா பாடல்களை வரித்துக்கொண்ட புள்ளிங்கோ பாடல்கள்’ எனும் பொருண்மையிலும், பேராசிரியர் இ. முத்தையா அவர்கள் ‘நாட்டுப்புற நிகழ்த்துகைகளைப் பயன்படுத்தி மக்களின் புலப் பெயர் வரலாற்றைக் கட்டமைத்தலின் தேவை...’ எனும் பொருண்மையிலும், பேராசிரியர் ஆ. தனஞ்செயன் அவர்கள் ‘குறுங்கதைப் பாடல்களும் அவற்றின் முகமறியாத மரபுப் பேணுநர்களும்’ எனும் பொருண்மையிலும், பேராசிரியர் டி. தருமராஜ் அவர்கள் ‘நாட்டார் வழக்காற்றியலும் நிறுவனக் கட்டமைப்புகளும்’ எனும் பொருண்மையிலும், பேராசிரியர் ஞா. ஸ்டீபன் அவர்கள் ‘வாய்மொழிக் கதைகளும் நமது மரபுகளின் வேர்களும்’ எனும் பொருண்மையிலும், முனைவர் ச. கார்மேகம் அவர்கள் ‘சமூகப் பண்பாட்டு வரலாறெழுதியலில் நாட்டார் வழக்காறுகளின் வகிபாகம் : நிகழ்ந்தனவும் நிகழ வேண்டியனவும்’ எனும் பொருண்மையிலும், திரு. எச். ஹாமீம் முஸ்தபா அவர்கள் ‘எழுதிய கிளவியும் எழுதவேண்டிய கிளவிகளும் (நாட்டார் இஸ்லாத்தை முன்வைத்து)’ எனும் பொருண்மையிலும், முனைவர் சா. கந்தசுப்ரமணியம் அவர்கள் ‘வழக்காற்று ஆவணக்காப்பகங்களும், அருங்காட்சியகங்களும்: தேவைகளும், சவால்களும்’ எனும் பொருண்மையிலும் உரைகளை நிகழ்த்தினர்.

இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.