அறிஞர்கள் அவையம் நிகழ்வு - பத்து: சுவடியியல் - கல்வெட்டியல் - பதிப்பியல்

நிகழ்வு நாள் : 11.02.2026

தமிழ்நாடு அரசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆய்வுகளில் இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் நிகழவேண்டியவை குறித்தும்" அறிஞர்கள் உரையாடும் களமாக "அறிஞர்கள் அவையம்" உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு 29.05.2025 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு ஒன்பது நிகழ்வுகள் முடிந்த நிலையில், தற்போது பத்தாவது நிகழ்வாக “சுவடியியல் - கல்வெட்டியல் - பதிப்பியல்: நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்” என்ற பொருண்மையிலான கலந்துரையாடல் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத் தரைதளத்தில் அமைந்துள்ள மாநாட்டுக் கூடத்தில் இன்று (11.02.2026) காலை 10.00 மணிக்குத் தொடங்கி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர், வே. இராஜாராமன், இ.ஆ.ப., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) ஆகியோர் தலைமையுரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழிலக்கியம் (ம) சுவடியியல் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் சு. தாமரைப்பாண்டியன் அவர்கள் நோக்கவுரை ஆற்றினார்.

தொடர்ந்து, முனைவர் ஆ. தசரதன் அவர்கள் ‘கதைப்பாடல் சுவடிகள் திரட்டலும் பதிப்பும்’ எனும் பொருண்மையிலும், முனைவர் ழான் லூய்க் செவ்வியார் அவர்கள் ‘சுவடிமூலாதாரப் பதிப்புகளைத் தயாரிப்பதில் சில பரிசோதனைகள்: செய்தனவும் செய்ய வேண்டியனவும்’ எனும் பொருண்மையிலும், முனைவர் தி. இராஜரெத்தினம் அவர்கள் ‘தமிழ்ச் செவ்விலக்கியச் சுவடிகள் சேகரிப்பும் செம்பதிப்புகளும்’ எனும் பொருண்மையிலும், முனைவர் மணி. மாறன் அவர்கள் ‘தமிழில் சித்த மருத்துவச் சுவடிகள்: செய்தனவும் செய்ய வேண்டியனவும்’ எனும் பொருண்மையிலும், முனைவர் கோ. உத்திராடம் அவர்கள் ‘பக்தியிலக்கியச் சுவடிகள் சேகரிப்பும் பதிப்புகளும்’ எனும் பொருண்மையிலும், முனைவர் கோ. சசிகலா அவர்கள் ‘சுவடித்திரட்டுதல்: செய்தனவும் செய்ய வேண்டியனவும்’ எனும் பொருண்மையிலும், முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள் ‘கர்நாடக மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள்’ எனும் பொருண்மையிலும், முனைவர் அர. பூங்குன்றன் அவர்கள் ‘தமிழ்நாட்டில் தமிழிக் கல்வெட்டுகள்’ எனும் பொருண்மையிலும், முனைவர் சீ. வசந்தி அவர்கள் ‘பானை ஓடுகளும் தமிழி எழுத்துப் பொறிப்புகளும்’ எனும் பொருண்மையிலும், பேரா. சு. இராசவேலு அவர்கள் ‘தமிழி எழுத்துகளின் தோற்றமும் காலமும் - அண்மைக் கால ஆய்வுகள்’ எனும் பொருண்மையிலும், திரு. கி. ஸ்ரீதரன் அவர்கள் ‘வரலாற்று நோக்கில் திருக்கோயில் திருப்பணிகளும் கல்வெட்டுகளும்’ எனும் பொருண்மையிலும், திரு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ‘தமிழகச் செப்பேடுகள்’ எனும் பொருண்மையிலும் உரைகளை நிகழ்த்தினர்.

இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.