அறிஞர்கள் அவையம் நிகழ்வு - ஒன்பது - திருக்குறள்

நிகழ்வு நாள் : 28.01.2026

தமிழ்நாடு அரசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆய்வுகளில் இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் நிகழவேண்டியவை குறித்தும்" அறிஞர்கள் உரையாடும் களமாக "அறிஞர்கள் அவையம்" உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு 29.05.2025 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு எட்டு நிகழ்வுகள் முடிந்த நிலையில், தற்போது ஒன்பதாவது நிகழ்வாக “திருக்குறள்: நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்” என்ற பொருண்மையிலான கலந்துரையாடல் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத் தரைதளத்தில் அமைந்துள்ள மாநாட்டுக் கூடத்தில் இன்று (28.01.2026) காலை 10.00 மணிக்குத் தொடங்கி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் து. ஜானகி அவர்கள் நோக்கவுரை ஆற்றினார்.

தொடர்ந்து, பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள் ‘திருக்குறள் பதிப்பு வரலாறு’ எனும் பொருண்மையிலும், வலைத்தமிழ் ச. பார்த்தசாரதி அவர்கள் ‘திருக்குறள் பரப்புரையில் இன்றைய நிலையும் எதிர்காலத் தேவைகளும்’ எனும் பொருண்மையிலும், பேரா. கோ. பழனி அவர்கள் ‘திருக்குறளும் கல்விச் சிந்தனைகளும்’ எனும் பொருண்மையிலும், மருத்துவர் தே. சங்கர சரவணன் அவர்கள் ‘செல்லும்வாய் நோக்கிச் செயல்’ எனும் பொருண்மையிலும், பேரா. சூ. அமல்ராஜ் அவர்கள் ‘அயலக அறிஞர்களின் திருக்குறள் பணிகள்’ எனும் பொருண்மையிலும், பேரா. கு. மோகனராசு அவர்கள் ‘காலந்தோறும் திருக்குறள் உரைகள்’ எனும் பொருண்மையிலும், முனைவர் அ. சாகிர் உசைன் அவர்கள் ‘அரபுலகில் திருக்குறள்’ எனும் பொருண்மையிலும், திரு. சி. இராஜேந்திரன் அவர்கள் ‘துறைதோறும் திருக்குறள்’ எனும் பொருண்மையிலும், மருத்துவர் என்.வி.கே. அஷ்ரப் அவர்கள் ‘திருக்குறள் மொழிபெயர்ப்புகள்’ எனும் பொருண்மையிலும், முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள் ‘பிற்கால இலக்கணம் - இலக்கியம் - உரைகளில் திருக்குறள்’ எனும் பொருண்மையிலும், திரு. தாஜ்நூர் அவர்கள் ‘நாட்டுக்குறள்’ எனும் பொருண்மையிலும், திரு. சொ. வெங்கடேசன் அவர்கள் ‘நவீனத் தொழில்நுட்பத்தில் திருக்குறள்’ எனும் பொருண்மையிலும் உரைகளை நிகழ்த்தினர்.

இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.