அறிஞர்கள் அவையம் நிகழ்வு - எட்டு - அயல்நாடுகளில் தமிழரும் தமிழும்

நிகழ்வு நாள் : 04.12.2025

தமிழ்நாடு அரசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆய்வுகளில் இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் நிகழவேண்டியவை குறித்தும்" அறிஞர்கள் உரையாடும் களமாக "அறிஞர்கள் அவையம்" உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு 29.05.2025 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு ஏழு நிகழ்வுகள் முடிந்த நிலையில், தற்போது எட்டாவது நிகழ்வாக “அயல்நாடுகளில் தமிழரும் தமிழும்: நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்” பொருண்மையில் கலந்துரையாடல் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத் தரைதளத்தில் அமைந்துள்ள மாநாட்டுக் கூடத்தில் இன்று (04.12.2025) காலை 10.00 மணிக்குத் தொடங்கி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் நோக்கவுரை ஆற்றினார்.

தொடர்ந்து, முனைவர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் அவர்கள் ‘தமிழ் வணிகர்கள், அடிமைகள் மற்றும் தொழிலாளர்கள் புலம்பெயர்வு: ஐரோப்பிய ஆவணங்களின் வழியே’ எனும் பொருண்மையிலும், கலாநிதி சி. மௌனகுரு அவர்கள் ‘ஈழத்து தமிழ் நாடக அரங்கு: தேடல் - கருத்தியல் - அரசியல்’ எனும் பொருண்மையிலும், இந்திரன் அவர்கள் ‘தமிழர் எதிர்காலவியல்’ எனும் பொருண்மையிலும், அருண் மகிழ்நன் அவர்கள் ‘ஊர் திரும்பியவர்கள் வேர் ஊன்றியவர்கள்’ எனும் பொருண்மையிலும், முனைவர் பாரதி சங்கர ராஜுலு அவர்கள் ‘அமெரிக்கத் தமிழரும் தமிழும்’ எனும் பொருண்மையிலும், முனைவர் மார்க்சிய காந்தி அவர்கள் ‘அயல்நாடுகளில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள்’ எனும் பொருண்மையிலும், முனைவர் அ. வெண்ணிலா அவர்கள் ‘கரும்புத் தோட்டத்தினிலே’ எனும் பொருண்மையிலும், முனைவர் குறிஞ்சி வேந்தன் அவர்கள் ‘புலம்பெயர்ந்தோர் வாழ்வியலைப் புலப்படுத்தும் தமிழ்ப் புதினங்கள்: வரலாறும் வளர்ச்சியும்’ எனும் பொருண்மையிலும், முனைவர் க. சுபாஷிணி அவர்கள் ‘கிழக்காசிய நாடுகளுக்கான தமிழர் புலப்பெயர்வு: வரலாற்று ஆவணப் பதிவுகளும் பண்பாட்டு விரிவாக்கமும்’ எனும் பொருண்மையிலும், முனைவர் ர. பூங்குன்றன் அவர்கள் ‘கடல்சார் வணிகம்’ எனும் பொருண்மையிலும் உரை நிகழ்த்தினர்.

இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.