அறிஞர்கள் அவையம் நிகழ்வு - ஏழு - திராவிட மொழியியல் ஆய்வுகள்

நிகழ்வு நாள் : 20.11.2025

தமிழ்நாடு அரசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆய்வுகளில் இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் நிகழவேண்டியவை குறித்தும்" அறிஞர்கள் உரையாடும் களமாக "அறிஞர்கள் அவையம்" உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு 29.05.2025 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு ஆறு நிகழ்வுகள் முடிந்த நிலையில், தற்போது ஏழாவது நிகழ்வாக “திராவிட மொழியியல் ஆய்வுகள்: நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்” பொருண்மையில் கலந்துரையாடல் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத் தரைதளத்தில் அமைந்துள்ள மாநாட்டுக் கூடத்தில் இன்று (20.11.2025) காலை 10.00 மணிக்குத் தொடங்கி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தமிழ்மொழி (ம) மொழியியல் புல இணைப்பேராசிரியருமான முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் நோக்கவுரை ஆற்றினார்.

தொடர்ந்து, ‘திராவிட மொழிகள் - இன்றைய நிலையும் எதிர்கால நோக்கும்’ எனும் பொருண்மையில், பேரா. கி. கருணாகரன் அவர்களும், ‘திராவிட மொழிகளுக்குத் தேவையான அகராதிகள்’ எனும் பொருண்மையில், பேரா. பா.ரா. சுப்ரமணியன் அவர்களும், ‘திராவிட மொழிகளின் ஒலியனியல் ஒப்பாய்வு’ எனும் பொருண்மையில், பேரா. கி. அரங்கன் அவர்களும், ‘திராவிடப் பழங்குடி மொழிகள் ஆய்வுகள்’ எனும் பொருண்மையில், பேரா. நீ. ராஜசேகரன் நாயர் அவர்களும், ‘மரபணுவியலும் திராவிட மொழிக்குடும்ப அடையாளமும்’ எனும் பொருண்மையில், பேரா. இரா. முத்தரசன் அவர்களும், ‘திராவிட மொழியியல் - வரலாற்று அணுகுமுறை’ எனும் பொருண்மையில், முனைவர் கொலிச்சலா சுரேஷ் அவர்களும், ‘திராவிட மொழியியல் கருத்தாக்கங்களும் சிந்தனைகளும்’ எனும் பொருண்மையில், பேரா. எல். இராமமூர்த்தி அவர்களும், ‘திராவிட மொழிகளுக்கிடையே மொழிபெயர்ப்புப் பணிகள்’ எனும் பொருண்மையில், பேரா. கோ. பாலசுப்ரமணியன் அவர்களும், ‘திராவிட மொழிகளின் பரவல்களும் தற்போதைய நிலைப்பாடும்’ எனும் பொருண்மையில், பேரா. பா. உமாராணி அவர்களும், ‘200 ஆண்டு கால திராவிட ஒப்பீட்டு மொழியியல் (1816-2016)’ எனும் பொருண்மையில், முனைவர் பி. ஸ்ரீகுமார் அவர்களும் உரை நிகழ்த்தினர்.

இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.