அறிஞர்கள் அவையம் நிகழ்வு – ஆறு தமிழகப் பழங்குடிகள் - ஆய்வுகள்

நிகழ்வு நாள் : 25.10.2025

தமிழ்நாடு அரசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆய்வுகளில் இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் நிகழவேண்டியவை குறித்தும்" அறிஞர்கள் உரையாடும் களமாக "அறிஞர்கள் அவையம்" உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு 29.05.2025 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு ஐந்து நிகழ்வுகள் முடிந்த நிலையில், தற்போது ஆறாவது நிகழ்வாக “தமிழகப் பழங்குடிகள் - ஆய்வுகள்: நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்” பொருண்மையில் கலந்துரையாடல் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத் தரைதளத்தில் அமைந்துள்ள மாநாட்டுக் கூடத்தில் இன்று (24.10.2025) காலை 10.00 மணிக்குத் தொடங்கி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன, சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் கா.காமராஜ் அவர்கள் நோக்கவுரை ஆற்றினார்.

தொடர்ந்து, முனைவர் எஸ்.பக்தவத்சலபாரதி அவர்கள் ‘தமிழகப் பழங்குடிகள் : பருப்பொருளும், நுண்பொருளும்’ எனும் பொருண்மையிலும், முனைவர் சி. மகேசுவரன் அவர்கள் ‘அரிய பழந்தமிழ்ச் சொற்களின் கருவூலமாகத் திகழும் பழங்குடியினர் மொழிகள்’ எனும் பொருண்மையிலும், முனைவர் பீ. டாக்டர் நசீம் தீன் அவர்கள் ‘மேற்குத் தொடர்ச்சிமலைப் பழங்குடிகளின் வழக்காறுகளில் தமிழின் தாக்கம்’ எனும் பொருண்மையிலும், திரு. வி.பி. குணசேகரன் அவர்கள் ‘பழங்குடி மக்களின் காடுசார்ந்த வாழ்வியல் முறைகள்’ எனும் பொருண்மையிலும்,

திரு. ச.தனராஜ் அவர்கள் ‘அதிக கவனம் பெறாத பழங்குடிகளின் பிரச்சனைகளும், ஆக்கப்பூர்வமான தீர்வுகளும்’ எனும் பொருண்மையிலும், முனைவர் ரே.கோவிந்தராஜ் அவர்கள் ‘ஜவ்வாது மலை மலையாளிப் பழங்குடிகளின் நிகழ்த்துக் கலைகள்’ எனும் பொருண்மையிலும், முனைவர் பெ. தமிழ் ஒளி அவர்கள் ‘தமிழ்நாட்டுப் பழங்குடிகளின் இனவரைவியல்’ எனும் பொருண்மையிலும், திருமதி கே. வாசமல்லி அவர்கள் ‘தமிழகப் பழங்குடிகளின் இயற்கை சார்ந்த வாழ்வியல் முறைகள்’ எனும் பொருண்மையிலும், முனைவர் ச. உதயக்குமார் அவர்கள் ‘பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பழங்குடியினருக்கான வாழ்வாதார வழிவகைகள்’ எனும் பொருண்மையிலும், முனைவர் அ.பகத்சிங் அவர்கள் ‘பழங்குடி இனவரைவியல் - காலனிய நீக்கமும், புதிய களங்களும்’ எனும் பொருண்மையிலும், முனைவர் செ.துரைமுருகன் அவர்கள் ‘கூடலூரில் பழங்குடி பன்மியம்’ எனும் பொருண்மையிலும், திரு. ஒடியன் லெட்சுமணன் அவர்கள் ‘தமிழகப் பழங்குடி மக்களின் பண்பாடு மற்றும் மொழிப் பாதுகாப்பில் சமூகப்பங்கேற்பு உத்திகள், தேவைகள்’ எனும் பொருண்மையிலும் உரை நிகழ்த்தினர்.

இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.