அறிஞர்கள் அவையம் நிகழ்வு – ஐந்து – ஒப்பியல் ஆய்வுகள்

நிகழ்வு நாள் : 25.09.2025

தமிழ்நாடு அரசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆய்வுகளில் இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் நிகழவேண்டியவை குறித்தும்" அறிஞர்கள் உரையாடும் களமாக "அறிஞர்கள் அவையம்" உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு 29.05.2025 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நான்கு நிகழ்வுகள் முடிந்த நிலையில், தற்போது ஐந்தாவது நிகழ்வாக “ஒப்பியல் ஆய்வுகள்: நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்” பொருண்மையில் கலந்துரையாடல் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத் தரைதளத்தில் அமைந்துள்ள மாநாட்டுக் கூடத்தில் இன்று (25.09.2025) காலை 10.00 மணிக்குத் தொடங்கி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர்
திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றிட, தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன, சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் பவித்ரா வி.இரா. அவர்கள் நோக்கவுரை ஆற்றினார்.

தொடர்ந்து, திரு. ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்கள் “கலை ஆய்வுகள்” எனும் பொருண்மையிலும், திரு. சு. தியடோர் பாஸ்கரன் அவர்கள் “சுற்றுச்சூழல் இயக்கமும் தமிழும்” எனும் பொருண்மையிலும், பேரா. அ. மார்க்ஸ் அவர்கள் “விளிம்புநிலை ஆய்வுகள்” எனும் பொருண்மையிலும், பேரா. வ. கீதா அவர்கள் “தமிழ்ச் சூழலில் பெண்ணியம்: இன்றுள்ள அறிவும் ஆய்வுகளும்” எனும் பொருண்மையிலும், பேரா. சுந்தர் காளி அவர்கள் “நிகழ்த்து கலை ஆய்வுகள்” எனும் பொருண்மையிலும், பேரா. ஈ. சுவர்ணவேல் அவர்கள் “தமிழ்ச் சினிமாவின் ஆய்வுத் தடங்கள்” எனும் பொருண்மையிலும், பேரா. இரா. அழகரசன் அவர்கள் “மொழிபெயர்ப்பு ஆய்வுகள்” எனும் பொருண்மையிலும், எழுத்தாளர் திரு. கமலக்கண்ணன் அவர்கள் “தமிழ் ஜப்பான் இலக்கிய ஒப்பாய்வு” எனும் பொருண்மையிலும், பேரா. ந.ச. மீராகமல் அவர்கள் “தமிழ் - பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் மொழி மற்றும் பண்பாட்டுச் சிக்கல்” எனும் பொருண்மையிலும், பேரா. ந. கோவிந்தராஜன் அவர்கள் “திராவிடவியல் ஆய்வுகள்” எனும் பொருண்மையிலும் உரை நிகழ்த்தினர்.

இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.