அறிஞர்கள் அவையம் நிகழ்வு – நான்கு – பயன்பாட்டுத் தமிழியல்

நிகழ்வு நாள் : 29.08.2025

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
அறிஞர்கள் அவையம்
நிகழ்வு – நான்கு – பயன்பாட்டுத் தமிழியல்

தமிழ்நாடு அரசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆய்வுகளில் இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் நிகழவேண்டியவை குறித்தும்" அறிஞர்கள் உரையாடும் களமாக "அறிஞர்கள் அவையம்" உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு 29.05.2025 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு மூன்று நிகழ்வுகள் முடிந்த நிலையில், தற்போது நான்காம் நிகழ்வாக “பயன்பாட்டுத் தமிழியல்: நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்” பொருண்மையில் கலந்துரையாடல் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத் தரைதளத்தில் அமைந்துள்ள மாநாட்டுக் கூடத்தில் இன்று (29.08.2025) காலை 10.00 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

இந்நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர்தம் உரையில், அறிஞர்கள் அவையம் இந்நிகழ்வானது இரண்டு பொது கோட்பாடுகளை நோக்கிச் செல்கின்றது. பல அரிய ஆய்வு நூல்களை அச்சேற்றி அடுத்தகட்ட பணிகளுக்குக் கொண்டு சென்றுள்ளது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். 1960களில் உள்ளதுபோல் இல்லாமல் இன்று 2020களில் கையளவில் சுருங்கி உள்ளது.

1960, 70களில் ஏடுகளில் இருந்து அச்சாக்கம் செய்வதே கடமையாக இருந்தது. அப்போது உலக வரைபடத்தைக் கொண்டே நாம் உலகை அறிய முடிந்தது. ஆனால் இன்றோ நிலை வேறு. இந்த International Tamil என்பதை Integrated Tamil என்று ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்வதே முதல் கோட்பாடாகும். அகராதியியல், இலக்கியவியல், இலக்கணவியல் ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவது நிகழ்வாக இன்று பயன்பாட்டுத் தமிழியல் நடைபெறுகிறது. இதில் இதுவரை நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் துறை சார்ந்தவர்களாகும். ஆர்வ மிகுதியால் சில தனி நபர்களும் செய்தவையாகும். எழுத்துருக்கள் உருவானது எப்படி, அதில் ஒருங்குகுறி உருவாகியது எப்படி அதில் நிலையான விசைப்பலகை, இணையவழி அச்சாக்கம், மின் நூலாக்கம் இவை அனைத்திற்கும் அட்டவணைகளை உருவாக்கி ஒரே இடத்தில் கிடைப்பதற்கான மனித வள ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்ய விரும்புகிறோம். 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏட்டுச் சுவடியில் இருந்த அச்சாக்கம் இன்று செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளது. நேற்றுகூட சங்க இலக்கியக் குறுந்தொகையிலிருந்து AI வழி ஒரு பாடல் வந்தது. அது குறுந்தொகைதானா? என்று ஐயப்பட்டேன். அண்மையில் கூட திருக்குறளில் இல்லாத ஒன்றை குறளாக மேற்கோள் காட்டியது இதற்குச் சான்றாகும். செயற்கை நுண்ணறிவில் வரும் தமிழ் சார்ந்து வருபவை அனைத்தையும் சரிபார்க்க வேண்டிய தேவை இன்றியமையாதது. இவை போல் நாம் 100 செயல்களுக்குத் திட்டமிடுவோம். அவற்றில் 5 முதல் 10 செயல்களைச் செயல்படுத்துவோம்.

இந்த நிகழ்வுகளின் முடிவுகள் அனைத்தும் செயலாக்கம் பெற அரசுக்குக் கொண்டு சேர்ப்பது எனது கடமையாகும். எடுத்துக்காட்டாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குத் தமிழ் சார்ந்த மூன்று புதுமையான திட்டங்களுக்கான அனுமதியைப் பெற்றுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநர்
முனைவர் ந. அருள் அவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன, தமிழ்மொழி (ம) மொழியியல் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் நா. சுலோசனா அவர்கள் நோக்கவுரை ஆற்றினார்.

தொடர்ந்து, முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன் அவர்கள் “அறிவியல் தமிழ்” எனும் பொருண்மையிலும், முனைவர் வ.தனலட்சுமி அவர்கள் “இயற்கை மொழி ஆய்வும் மொழிச் செயல்பாடும்” எனும் பொருண்மையிலும், திரு. முத்து நெடுமாறன் அவர்கள் “தமிழ் எழுத்துருவியல் - அடிப்படைப் பயன்பாடும் அழகியல் நுணுக்கங்களும்” எனும் பொருண்மையிலும், திரு. தேனி மு.சுப்பிரமணி அவர்கள் “விக்கிப்பீடியா மற்றும் விக்கிப்பீடியா சகோதரத் திட்டங்களில் தமிழ்” எனும் பொருண்மையிலும், திரு. ஆர்.பிரகாஷ் அவர்கள் “நூலகப் பயன்பாட்டியல்: நிகழ்ந்தவையும் நிகழவேண்டியவையும்” எனும் பொருண்மையிலும், திரு. மணி.மணிவண்ணன் அவர்கள் “மொழித் தொழில்நுட்பம், தகவல் பாதுகாப்புச் சிக்கல்கள்” எனும் பொருண்மையிலும், திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் “தமிழும் தொழில்நுட்பமும் - பானை முதல் செய்யறிவு வரை” எனும் பொருண்மையிலும், திரு. த.சீனிவாசன் அவர்கள் “தமிழில் கட்டற்ற சொற்பிழைத் திருத்தி மற்றும் இலக்கணம், சொற்பிரிப்பு மென்பொருட்கள்” எனும் பொருண்மையிலும், முனைவர் பழ. அதியமான் அவர்கள் “சொல்லும் சொல்: ஊடகத் தமிழ்” எனும் பொருண்மையிலும் உரை நிகழ்த்தினர்.

இவ்விழாவில் தமிழறிஞர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் தமிழார்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.