தொல்காப்பியர் சுழலரங்கம் : மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் நிகழ்வு - ஒன்று - தொடக்கவிழா

நிகழ்வு நாள் : 22.08.2025

2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ்மொழியின் இலக்கணம், இலக்கியம், விழுமியங்கள் ஆகியவற்றின் சிறப்பினை ஆய்ந்திடும் நோக்கில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழியாக, தமிழ்ப் படைப்புகளை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் உள்ள தமிழ்த்துறை வாயிலாக, திங்கள்தோறும் தகைசால் தமிழறிஞர்கள் / ஆய்வாளர்களைக் கொண்டு ‘தொல்காப்பியர் சுழலரங்கம் : மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம்’ எனும் பொருண்மையில் சிறப்புப் பொழிவு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சி (22.08.2025) இன்று நிறுவன பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக்கூடத்தில் காலை 11.00 மணிக்குத் தொடங்கியது.

முன்னதாக இந்நிகழ்விற்காக உருவாக்கப்பட்ட இலச்சினையைத் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கிய மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் “தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பல்வேறு தமிழ் வளர்ச்சித் திட்டங்களையும், தமிழறிஞர்களின் பணிகளைப் போற்றியும் அவர்தம் தொண்டுகளுக்கு ஊக்கமளித்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் என்ற நிலையில் ‘தொல்காப்பியர் சுழலரங்கம்’ திட்டத்திற்கான இலச்சினையை அறிமுகப்படுத்தித் திட்டத்தைத் தொடங்கிவைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இத்திட்டம் தொடர்ந்து சிறப்புடன் நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. வே. இராஜாராமன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். நிறுவன தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புல இணைப்பேராசிரியர் முனைவர் அ. சதீஷ் அவர்கள் நோக்கவுரை ஆற்றிட, தொல்காப்பிய உரைகளும் பதிப்புகளும் - பொருள்கோடலின் படிநிலைகள் என்னும் தலைப்பில் அறிஞர் பொ.வேல்சாமி அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தொல்காப்பிய ஆய்விருக்கை ஆய்வாளர் வி. அகிலா இணைப்புரையாற்றிட, நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் நன்றி நவின்றார்.

இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், பிற கல்லூரிகளின் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இத்திட்டத்தினைச் செயல்படுத்த முதற்கட்டமாக இந்த ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்தவுள்ள சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் - திருச்சிராப்பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - திருநெல்வேலி, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் - கொடைக்கானல், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - சிதம்பரம், பெரியார் பல்கலைக்கழகம் - சேலம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் - வேலூர், அழகப்பா பல்கலைக்கழகம் - காரைக்குடி ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்வினைத் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா பல்கலைக்கழகம், புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் வேறு பல கல்லூரிகளிலிருந்தும் பேராசிரியர்களுடன், ஆய்வாளர்கள், மாணவர்கள் என 1500க்கும் மேற்பட்டோர் கண்டு பயனடைந்தனர்.

மாநிலம் தழுவிய வெள்ளி வட்டமாகத் தொடங்கப்பட்ட தொல்காப்பியர் சுழலரங்கம் தொடர் நிகழ்வின் தொடக்க நிகழ்விலேயே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றுப் பயன்கொண்டதன்மூலம் தொல்காப்பியர் சுழலரங்கம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையும் தாண்டி விரிவடைந்துள்ளது.