அறிஞர்கள் அவையம் நிகழ்வு - மூன்று – இலக்கணவியல்

நிகழ்வு நாள் : 10.07.2025

தமிழ்நாடு அரசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆய்வுகளில் இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் நிகழவேண்டியவை குறித்தும்" அறிஞர்கள் உரையாடும் களமாக "அறிஞர்கள் அவையம்" உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு 29.05.2025 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்த்தித்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு இரண்டு நிகழ்வுகள் முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் நிகழ்வாக இலக்கணவியல்: நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும் குறித்த கலந்துரையாடல் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத் தரைதளத்தில் அமைந்துள்ள மாநாட்டுக் கூடத்தில் இன்று (10.07.2025) காலை 10.00 மணிக்குத் தொடங்கி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில், வல்லுநர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அறிஞர்கள் அவையம் தொடர்ந்து மூன்றாவது நிகழ்வாக நடத்தி வருகிறோம். தொடர்ந்து தொல்காப்பியர் சுழலரங்கம் சொற்பொழிவுகள் அடுத்த மாதத்தில் தொடங்கி இந்த ஆண்டுக்குள் நடத்திமுடிக்க திட்டமிட்டிருக்கிறோம். நான் நாற்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வெளியே பணிபுரிந்தவன். 2025ஆம் ஆண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கும் சூழலில் தமிழியலில், நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும் என்ற இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிகழ்வு தமிழாய்வுக்கு ஒரு தணிக்கையாகும். இது அரசுத் துறை சார்ந்தும், பேராசிரியர்கள், ஓய்வுப்பெற்ற பேராசிரியர்கள் மட்டுமல்லாமல், வெளியே நிறுவனம் சார்ந்தும், சாராதவர்களும் இவ்வாய்வுப் பணிகளைச் செய்துவருகிறார்கள். அவர்களுள் பாண்டியராஜா, வேல்சாமி போன்ற அறிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இதன் முதல் நிகழ்வில் பேராசிரியர் அ.சதிஷ் அவர்களால் அகராதியியல் என்ற பொருண்மையிலும், பேராசிரியர் ஆ.மணவழகன் அவர்களால் சங்க இலக்கியம் என்ற பொருண்மையிலும் இரண்டு நிகழ்வுகள் சிறப்பாக நடத்தப்பட்டு, இதன் அடுத்தக்கட்டப் பணிகளுக்காக அறிஞர்பெருமக்களைக் கொண்டு வழிகாட்டு நெறிமுறை குழு அமைக்கப்பட்டு. அவர்களிடமிருந்து இதன் அடுத்தக்கட்ட செயல்பாடுகளுக்காககருத்துகள் பெற்று அரசின் திட்டக்குழுவிடம் கொண்டு சேர்க்கப்படும். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் போன்றவர்களால் உலகளவில் தமிழாய்வுப் பணிகளைக் கொண்டுசேர்க்க உருவாக்கப்பட்ட இந்த உலகத் தமிழாராயச்சி நிறுவனம். இன்று உலகம் அறிவியல் தொழில்நுட்பத்தால் கையடக்கத்தில் வந்துள்ளதால் ‘international’ என்பது ‘integrated’ என்றாகி தற்போது நிறுவனத்தின் முதன்மையான பணியே ஒருங்கிணைப்பாகி உள்ளது. எங்கும், எவரும், எப்போதும் என்ற நிலையில் தமிழாய்வுப்பணிகளுக்காக இதுவரை 75க்கும் மேற்பட்ட துறைசார்ந்த அறிஞர் பெருமக்களை நேரிலும், தொலைபேசி வழியிலும் தொடர்பு கொண்டுள்ளேன். இவ்வாய்வு முடிவுகளிலிருந்து 500 முதல் 1000ம் தலைப்புகளில் அனைத்து துறையினருக்கும், அனைத்து இடங்களிலும் கிடைக்கும் வகையில் இவ்வாய்வுப் பணிகளை கொண்டுச்செல்வோம்’ என்று கூறினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன, தமிழ்மொழி (ம) மொழியியல் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் க. சுசீலா அவர்கள் நோக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து, முனைவர் பொன். கோதண்டராமன் அவர்கள் "இக்காலத் தமிழ் இலக்கணம்" எனும் பொருண்மையிலும், முனைவர் ப. மருதநாயகம் அவர்கள் "இலக்கண மொழிபெயர்ப்புகள்" எனும் பொருண்மையிலும், முனைவர் கி. நாச்சிமுத்து அவர்கள் "தொல்காப்பிய ஆய்வுகள் - உரைகளை முன்னிறுத்தி" எனும் பொருண்மையிலும், முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் "தொல்காப்பிய மரபும் - எழுத்து வருகையும்" எனும் பொருண்மையிலும், முனைவர் ந. நடராசபிள்ளை அவர்கள் "தொல்காப்பியப் பதிப்புகள்" எனும் பொருண்மையிலும், முனைவர் அ. சீனிவாசன் அவர்கள் "தொல்காப்பிய ஆய்வுகள்: நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்" எனும் பொருண்மையிலும், முனைவர் வீ. ரேணுகாதேவி அவர்கள் "செய்யுளியலும் நடையியலும்" எனும் பொருண்மையிலும், முனைவர் அ. காமாட்சி அவர்கள் "மொழியியல் பார்வையில் தொல்காப்பிய மூலம்" எனும் பொருண்மையிலும், முனைவர் லி. இராமமூர்த்தி அவர்கள் "தொல்காப்பிய இலக்கணக் கருத்தாக்கம்: மரபும் நெகிழ்வும்" எனும் பொருண்மையிலும், முனைவர் ச. திருஞானசம்பந்தம் அவர்கள் "ஐந்திலக்கண ஆய்வுகள்" எனும் பொருண்மையிலும், முனைவர் ஆ. ஏகாம்பரம் அவர்கள் "தொல்லியல் நோக்கில் தொல்காப்பியம்" எனும் பொருண்மையிலும், முனைவர் இ. சூசை அவர்கள் "தொல்காப்பிய மரபில் அயலகத் தமிழ் இலக்கணங்கள்" எனும் பொருண்மையிலும் உரை நிகழ்த்தினர்.

இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன ஆய்வு மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.