அறிஞர்கள்அவையம் நிகழ்வு - இரண்டு–இலக்கியவியல்

நிகழ்வு நாள் : 26.06.2025

தமிழ்நாடு அரசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆய்வுகளில் இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் நிகழவேண்டியவை குறித்தும்" அறிஞர்கள் உரையாடும் களமாக "அறிஞர்கள் அவையம்" உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு 29.05.2025 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்த்தித்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நடந்து முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் நிகழ்வாகச் சங்க இலக்கியம்: நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும் குறித்த கலந்துரையாடல் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத் தரைதளத்தில் அமைந்துள்ள மாநாட்டுக் கூடத்தில் இன்று (26.06.2025) காலை 10.00 மணிக்குத் தொடங்கி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர்தம் உரையில், “அறிஞர்கள் அவையம் தமிழியலில் செய்ய வேண்டியவற்றிற்காகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தோன்றியதிலிருந்து ஏராளமான செயல்கள் செய்யப்பட்டுள்ளன, இவை நிறுவனங்கள் சார்ந்தும் சாராமலும் செய்யப்பட்டுள்ளன. இப்போதும், பல்கலைக்கழகங்களில் ஓய்வுப்பெற்ற துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலரைத் தொலைப்பேசி வழி தொடர்பு கொண்டு, தமிழியல் குறித்து பேசிவருவதாகவும், தமிழியல் எழுத்துகளிலிருந்து ஏடுகளுக்கு மாற்றம் அடைந்ததும், அதிலிருந்து அச்சுக்கு மாற்றம் அடைந்ததும், தற்போது டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு மாறியுள்ளதும் தமிழியலின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய மாற்றங்களாகும். இதன் தொடக்க நிகழ்வில் அகராதியியல் அறிஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டு பெறப்பட்ட கருத்துகள் டிஜிட்டலாகவும், கட்டுரைகளாகவும் அடுத்தக்கட்ட நிகழ்வுகளுக்காகவும், அரசு செய்ய வேண்டிய பணிகளுக்காகவும், அரசிடம் கொண்டுச் செல்லப்படும்.

ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு தமிழியலில் செய்ய வேண்டிய ஆக்கப்பணிகளுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தன் சிறந்த ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்யும். அது அரசு சார்ந்தும், சாராமலும் இருக்கும். இதற்கான ஆக்கப்பணிகள் மற்றும் ஓய்வுப்பெற்ற பேராசிரியர்கள், துறை சார்ந்தவர்கள், துறை சாராதவர்கள் ஆகியோரின் கருத்துகள் உரிய முறையில் அரசுக்கு கொண்டு செல்லப்படும்.

இந்நிகழ்வில் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் முழுவதுமாக பதிவுசெய்யப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்லப்படும்.

இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும், ஜவகர்கலால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களை மனதார வரவேற்கிறேன்.

இந்நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும், வெளி உலகிற்கும் கொண்டு செல்லப்படும். அமெரிக்காவைச் சார்ந்த முனைவர் வைதேகி ஹெர்பர்ட் அவர்களும் முனைவர் ம. திருமலை அவர்களும் இந்நிகழ்வில் இணையவழியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது.

அறிஞர்கள் அவையம் நிகழ்வுகள் அனைத்தும் எதிர்கால நடவடிக்கைகளுக்காக உரியமுறையில் பதிவுச் செய்யப்படும்” என்று கூறினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன, சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புல, இணைப் பேராசிரியருமான முனைவர் ஆ. மணவழகன் அவர்கள் நோக்கவுரை ஆற்றினார்.

தொடர்ந்து, "சங்க இலக்கியம்: சமூகவியல் நோக்கு" எனும் பொருண்மையில் முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும், "சங்க இலக்கிய ஆய்வுகள்" எனும் பொருண்மையில் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்களும், "சங்க இலக்கியப் பதிப்புகள்" எனும் பொருண்மையில் முனைவர் அன்னிதாமசு அவர்களும், "சங்க இலக்கியமும் எதிர்காலவியலும்" எனும் பொருண்மையில் முனைவர் ச. சிவகாமி அவர்களும், "சங்க இலக்கிய உரைகள் - பத்துப்பாட்டு" எனும் பொருண்மையில் முனைவர் ம. திருமலை அவர்களும், "சங்க இலக்கியப் பிரதிகளின் காலம்" எனும் பொருண்மையில் முனைவர் வீ. அரசு அவர்களும், "சங்க இலக்கியம்: கோட்பாட்டியல் ஆய்வுகள்" எனும் பொருண்மையில் முனைவர் மு. முத்துவேல் அவர்களும், "சங்க இலக்கியமும் தொல்லியலும்" எனும் பொருண்மையில் முனைவர் சு. இராசவேலு அவர்களும், "புறநானூற்றுப் பதிப்பு உணர்த்தும் சில அடிப்படைகள்" எனும் பொருண்மையில் முனைவர் கோ. விஜயவேணுகோபால் அவர்களும், "சங்க இலக்கிய உரைகள் - எட்டுத்தொகை" எனும் பொருண்மையில் முனைவர் இரா. அறவேந்தன் அவர்களும், "சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகள்" எனும் பொருண்மையில் முனைவர் சௌ. வீரலெக்ஷ்மி அவர்களும், "சங்க இலக்கியத்தில் தமிழரின் வாழ்க்கைமுறைக் கோட்பாடுகள்" எனும் பொருண்மையில் முனைவர் வைதேகி ஹெர்பர்ட் அவர்களும் உரை நிகழ்த்தினர்.

இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.