பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர்ச் சொற்பொழிவு -2

நிகழ்வு நாள் : 29.08.2024

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (29.08.2024) பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பில் தொடர்ச் சொற்பொழிவு - 2 நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் திருமிகு எச்.இ.அனீஸ் பாத்திமா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிறுவன உதவிப் பேராசிரியரும் ஆய்விருக்கைப் பொறுப்பாளருமான முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம் அவர்கள் நோக்கவுரையாற்றினார்.

காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் தமிழ்த்துறைத் தலைவருமான பேரா. முனைவர் ஜெ.ஹாஜாகனி அவர்கள் "சமூகநீதி வெல்கவென்று சங்கே முழங்கு! எனும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார் அவர்தம் உரையில் புரட்சி என்பது கடைக்கண்ணால் வருவது அல்ல, கல்வியால் வருவதே என்று பாடிய பாவலர் பாரதிதாசன் பெரியாரின் கருத்துகளை இலக்கியமயப்படுத்தியவர் என்றால் மிகையில்லை என்றார். 'ஏடெடுத்தேன் கவியொன்று வரைந்திட' என்ற பாடலே பாரதிதாசனின் பாட்டுக்கொள்கையாகும். இன்னலிலே தமிழ்நாட்டு மக்கள் துன்பப்படுவதை தான் பாடுவேன் என்றார் புரட்சிக்கவிஞர். கல்வியின் முக்கியத்துவம், தாழ்த்தப்பட்டோர் விடுதலை, மொழிப்பற்று சாதி எதிர்ப்பு, மதவெறி எதிர்ப்பு, வல்லாதிக்க எதிர்ப்பு என்றெல்லாம் பாடிய பாவேந்தரின் ஆக்கங்களைச் சிலர் திரித்து சொல்லி வருவது ஆபத்தாகும். குறிப்பாக பாரதிதாசன் தனது படைப்புகள் வழி முன்வைத்தது சமூக நீதி சிந்தனையேயாகும். இசுலாமிய பாடகர் நாகூர் ஹனிபா 'எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!' என்ற பாடலை முழங்கியபோது பாரதிதாசன் அதைக்கேட்டு என் பாடலுக்கு உயிர் கொடுத்ததற்கு பாராட்டினாராம். பாரதிதாசனை முன்னெடுப்பது காலத்தின் தேவை என்றார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவி திருமிகு ச.ஜனனி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிட, நிறுவன மாணவர் திருமிகு ம.தமிழ்ச்செல்வன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நிறுவன மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படச்செய்தி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (29.08.2024) பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பில் தொடர்ச் சொற்பொழிவு - 2இல் காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி இணைப் பேராசிரியரும் தமிழ்த்துறைத் தலைவருமான பேரா. முனைவர் ஜெ.ஹாஜாகனி அவர்கள் "சமூகநீதி வெல்கவென்று சங்கே முழங்கு! எனும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார். உடன் நிறுவன மாணவி திருமிகு ச.ஜனனி, நிறுவன உதவிப் பேராசிரியரும் ஆய்விருக்கைப் பொறுப்பாளருமான முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம், நிறுவன மாணவர் திருமிகு ம.தமிழ்ச்செல்வன் மற்றும் நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் திருமிகு எச்.இ.அனீஸ் பாத்திமா ஆகியோர்.