அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

நிகழ்வு நாள் : 21.08.2024

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (21.08.2024) அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளின் தொடக்கமாக “பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை அறக்கட்டளை மற்றும் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு அறக்கட்டளை”ஆகிய இரு அறக்கட்டளைகளின் பொறுப்பாளரும், நிறுவனத்தின் உதவிப் பேராசிரியருமான முனைவர் கா. காமராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் சு. தாமரைப்பாண்டியன் முன்னிலை வகிக்க, நிறுவனத்தின் கூடுதல் பொறுப்பு இயக்குநர் திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்தம் தலைமையுரையில் 1980களிலிருந்து நிறுவனத்தில் அறக்கட்டளைகள் தோற்றுவிக்கப்பட்டு பொழிவுகள் நடைபெற்றுவருகின்றன. இப்பொழிவுகளால் அரிய பல தகவல்களை தெரிந்துக்கொள்ள முடியும் என்றும் இந்த வாய்ப்பினை ஆய்வு மாணவர்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற முதல் பொழிவில் தமிழ் ஆசிரியரும், பழங்குடி மக்கள் வாழ்வியல் ஆய்வாளருமான திரு. க. ஜெய்சங்கர் அவர்கள் “ஐவ்வாது மலை மேய்ச்சல் வாழ்வியல்”எனும் பொருண்மையில் ஐவ்வாது மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் அவர்களின் கால்நடைகள் வளர்ப்பு மற்றும் மேய்ச்சல் முறைகளையும், இம்மாடுகளின் பெயரால் அமைந்த ஊர்கள், நாட்டு மாடுகளின் வகைகள் அவை வாங்க, விற்க பயன்படுத்தப்படும் சந்தைகளுக்கான ஊர்கள், எருது காட்டும் விழா என ஐவ்வாது மலையின் சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்தார்.
பின்பு நடைபெற்ற இரண்டாம் பொழிவில் தமிழ் வளர்ச்சி இயக்ககம் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர், திரு. கூ.வ. எழிலரசு அவர்கள் “புரட்சியாளர் பெரியாரும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும்”எனும் பொருண்மையில் உரையாற்றினார். அவ்வுரையில் பெரியார் வழியினராக விளங்கிய புரட்சிக்கவிஞர் பெரியாரின் மதம், கடவுள் சார்ந்த கருத்து விளக்கங்களைக் கவிதைகளாக்கித் தந்தவர். புரட்டுகளாலும், புராணங்களாலும் ஒரு மதம் கட்டமைக்கப்பட்டு, அதில் மனிதனுக்குள் உயர்வும்-தாழ்வும், தீண்டாமைக் கொடுமையும் அரங்கேறுமானால் அதை இனியும் விட்டுவைப்பதா? என கொதித்தவர் புரட்சிக்கவிஞர். இந்த நாட்டு மக்களை ஒன்றுபட விடாமல் தடுத்துக் கொண்டு இருப்பவை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மத உணர்வும், சாதிய உணர்வும் என்பதை தம் கவிதை வழி விளக்கியவர் புரட்சிக் கவிஞர். இவ்வாறாக புரட்சியாளர் பெரியார் பற்றியும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் ஒரே கோட்டில் பயணித்ததையும், மேலும், பலரும் அறிந்திராத பெரியார் மற்றும் பாவேந்தர் பற்றிய அரிய தகவல்களையும் ஆய்வு மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் எடுத்துரைத்தார்.
இறுதியாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவி செல்வி மு. கார்த்திகா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படச்செய்தி 1: 21.08.2024 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற “டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு அறக்கட்டளை”சார்பில் பழங்குடி மக்கள் வாழ்வியல் ஆய்வாளர் திரு. க. ஜெய்சங்கர் அவர்களின் “ஐவ்வாது மலை மேய்ச்சல் வாழ்வியல்”எனும் சொற்பொழிவு நூல் வெளியிடப்பட்டது. உடன் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன், நிறுவன உதவிப் பேராசிரியரும் அறக்கட்டளைப் பொறுப்பாளருமான முனைவர் கா. காமராஜ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி இயக்ககம் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர்
திரு. கூ.வ. எழிலரசு ஆகியோர்.

படச்செய்தி 2 : 21.08.2024 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற “பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை அறக்கட்டளை”சொற்பொழிவில் தமிழ் வளர்ச்சி இயக்ககம் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் திரு. கூ.வ. எழிலரசு அவர்கள் “புரட்சியாளர் பெரியாரும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும்”எனும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார். உடன் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன், பழங்குடி மக்கள் வாழ்வியல் ஆய்வாளர் திரு. க. ஜெய்சங்கர், நிறுவன உதவிப் பேராசிரியரும் அறக்கட்டளைப் பொறுப்பாளருமான முனைவர் கா. காமராஜ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் ஆகியோர்.