தமிழ் இலக்கண - இலக்கியங்களில் சூழலியல் பன்னாட்டுக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 13.03.2024

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (13.03.2024) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை, சித்தை - தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் மற்றும் எழும்பூர், சென்னைச் சமூகப் பணிக் கல்லூரி இணைந்து 'தமிழ் இலக்கண - இலக்கியங்களில் சூழலியல்' எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. முற்பகல் 10 மணிக்கு நடைபெற்ற தொடக்க விழாவில் நிறுவன சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புல உதவிப் பேராசிரியரும் கருத்தரங் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கா.காமராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றிட, சித்தை-தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் முதுமுனைவர் ந.அறிவரசன் அவர்கள் நோக்கவுரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூடுதல் பொறுப்பு)
திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மேனாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கவிஞர் கூ.வ.எழிலரசு அவர்கள் தலைமையுரை ஆற்றினார். நிறுவன தமிழ்மொழி மற்றும் மொழியியல் புல உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் முன்னிலை வகித்திட, எழுத்தாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, பிற்பகல் 12 மணிக்கு இராணிமேரி கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கே.இரா. கமலாமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதல் அமர்வில் திருமதி ச.லதா - தொல்காப்பியம் காட்டும் சூழலியல் எனும் தலைப்பிலும், முனைவர் இ.நந்தமிழ் நங்கை - சூழலியல் நோக்கில் குறிஞ்சித் திணை எனும் தலைப்பிலும், முனைவர் ம.எஸ்தர் ஜெகதீசுவரி - சங்க இலக்கியத்தில் உயிரிரக்கக் கொள்கைகள் எனும் தலைப்பிலும், திரு. ம. விக்னேஷ்வரன் - மலைபடுகடாமில் சூழலியல் அமைவுகள் எனும் தலைப்பிலும், முனைவர் மு.சித்ரா தேவி - சங்க இலக்கியங்களில் சூழலியல்சார் புழங்குப் பொருட்கள் எனும் தலைப்பிலும் கட்டுரைகள் வாசித்தனர்.
பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை, செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். ஐ.வள்ளி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இரண்டாம் அமர்வில் திருமிகு இராம.கண்ணம்மை - சிலம்பில் சூழியல் எனும் தலைப்பிலும், முனைவர் ப.செந்தில்முருகன் - சூழலியல் நோக்கில் அளபெடை எனும் தலைப்பிலும், வே.நிஷா - 'களவுபோகும் புரவிகள்' சிறுகதைத் தொகுப்பில் சூழலியல் சிந்தனைகள் எனும் தலைப்பிலும், வழக்குரைஞர் பால சீனிவாசன் - புறச்சூழலைப் போற்றப் பாடம் புகட்டும் பரிபாட்டு எனும் தலைப்பிலும், முனைவர் ம.சுஜாதா - சூழலியல் பேசும் 'யானை டாக்டர்' எனும் தலைப்பிலும் கட்டுரைகள் வாசித்தனர்.
பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற நிறைவு விழாவில் முதுமுனைவரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான ந.அறிவரசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றிட, தமிழ்ச்செம்மல் முனைவர் நயம்பு அறிவுடைநம்பி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிறுவன இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் தலைமையுரையாற்றிட, நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புல இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். சூழலியலாளர் கவிஞர் அனிதா அவர்கள் சிறப்புரை வழங்கினார். வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் செவலியர், கலைமாமணி, டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்கள் நாட்டு விதைகளைச் சேகரித்துப் பரவலாக்குநர் திருமிகு. சுந்தர் (எ) சண்முக சுந்தரம் அவர்களுக்கு சித்தை-தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் வழங்கும் 2024ஆம் ஆண்டுக்கான கோ.நம்மாழ்வார் விருதையும் சான்றிதழையும் வழங்கி சிறப்பு செய்தார். நிறுவன ஆய்வியல் நிறைஞர் மாணவர் செ.செல்வம் அவர்கள் நெறியாள்கை செய்தார். சென்னைச் சமூகப் பணிக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான சி.ஆர். மஞ்சுளா அவர்கள் நன்றி நவின்றார். இவ்விழாவில் சூழலியல் ஆர்வலர்கள், கட்டுரையாளர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.