உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுப் பன்னாட்டுக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 07.03.2024

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுப் பன்னாட்டுக் கருத்தரங்கம்
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2023, செப்டம்பர் 20 அன்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தப்படி கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில் இன்று (07.03.2024) காலை 'கவிஞர் தமிழ்ஒளி படைப்புவெளி' எனும் பொருண்மையில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் கவிஞர் தமிழ்ஒளி படைப்புவெளி எனும் 35 கட்டுரையாளர்களின் கட்டுரை தொகுப்பு நூலினை வெளியிட, தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்களும் மாண்பமை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். ஐம்பெரும் விழாவின் இறுதியில், பிற்பகல் 11.30 மணி அளவில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கத் தொடக்க விழாவில் நிறுவன இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றிட, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் நா.சுலோசனா அவர்கள் நோக்கவுரையாற்றினார். சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழிலக்கியத் துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் தலைமையுரையாற்றிட, கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுத் தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் அவர்கள் கருத்தரங்கத் தொடக்கவுரையாற்றிட, கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுச் செயலாளர் கவிஞர் இரா.தெ.முத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, கருத்தரங்கம் மூன்று அமர்வுகளாக நடைபெற்றது இதில் 30 கட்டுரையாளர்கள் கட்டுரைகள் வாசித்தனர். மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் வரவேற்புரையாற்றிட நிறுவன இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் தலைமையுரையாற்றினார். நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுச் சிறப்புத் தலைவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் கருத்தரங்கக் கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி நிறைவுரையாற்றினார். அவர்தம் நிறைவுரையில், கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் சிறப்புகளையும், கவிஞர் பாரதிதாசனோடு கொண்டிருந்த நட்பையும் தமிழ்ஒளி அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் மிக அழகாக எடுத்துரைத்தார். ஔவை துரைசாமி அவர்களின் மாணவராக கவிஞர் தமிழ்ஒளி அவர்கள் திகழ்ந்ததை விளக்கி, தம்பால் தமிழ்ஒளி அவர்களுடன் கொண்டிருந்த நட்பின் ஆழத்தையும், தமிழ்ஒளி அவர்களின் படைப்புகளையும், படைப்புத்திறனையும் வெகுவாகப் பாராட்டினார்.
நிறுவன ஆய்வியல் நிறைஞர் மாணவர் திரு. செ.செல்வம் நிகழ்வினைத் தொகுத்து வழங்கிட, நிறுவன முதுகலை மாணவர் திரு. சி.கதிர்பாரதி நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் தமிழ்ஒளி பற்றாளர்கள், கட்டுரையாளர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படச்செய்தி:
07.03.2024 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுப் பன்னாட்டுக் கருத்தரங்கில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுச் சிறப்புத் தலைவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் கருத்தரங்கக் கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி நிறைவுரையாற்றினார் உடன் நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், நிறுவன இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள், கவிஞர் நயம்பு. அறிவுடைநம்பி மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் நிறுவன தமிழ்மொழி மற்றும் மொழியில் புல உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா ஆகியோர்.