உலகத் தமிழாராய்ச்சி நிறுவன - நிறுவன நாள் மற்றும் தமிழ் மன்றம் சார்பில் நடத்தப் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிக்கும் விழா

நிகழ்வு நாள் : 20.10.2023

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட நாளான அக்டோபர்த் திங்கள் 21ஆம் நாள் ஆண்டுதோறும் நிறுவன நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிறுவன நாள் இவ்வாண்டு 20.10.2023 - வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. தொடக்கமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றி அவர்தம் உரையில் நிறுவனத்தின் தோற்றம் மற்றும் நாளது வரையிலான வளர்ச்சியினை புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டார். மேலும், நிறுவனத்தின் வளர்ச்சிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பணியாளர்களின் உழைப்பினை நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் தலைமையுரையாற்றினார். அவர் தம் உரையில்...
தமிழ்நாடு அரசு சார்பில் கல்லூரிகள்தோறும் தமிழ் மன்றம் அமைத்து தமிழ்ச் சார்ந்த கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்குவதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் வைப்புத் தொகையாக ரூபாய் ஐந்து இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்தொகையை பல்கலைக்கழகத்திற்கு நிகரான பணிகளை ஆற்றிவரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவர்களும் பெற்று பயனடைய வழிசெய்யும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பெற்று வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும், தமிழ் பயிலும் மாணவிகள் பல்துறைகளிலும் இன்று முன்னோடிகளாகத் திகழ்ந்து வருவதாகவும், அண்மையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மூன்று பரிசுகளையும் மாணவிகளே பெற்றுள்ளது இதற்குச் சான்றாகும் என்றும், ஊடகம் சார்ந்த துறைகளில் மாணவிகள் பெருமளவில் பணியாற்றி வருவது பெருமைக்குரிய செய்தியாகவும், இனி வரும் காலங்களில் தமிழுக்கு அரசுப் பணிகளில் உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து மாணவர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், மேனாள் நிறுவன இயக்குநர்கள், நிறுவனத்தில் தற்போது பணிபுரியும் கல்வியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மேனாள் துணை இயக்குநர் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் அவர்தம் பணிகளையும் குறிப்பிட்டு பாராட்டினார். இவ்விழாவை மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகக் கருதுவதாகக் கூறினார்.
தொடர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் துணை இயக்குநர் (நிரு.) திரு. க.ந. வீரபாகு சுப்பிரமணியன் அவர்கள் நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ் மன்றம் சார்பில் நடத்தப்பெற்ற கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி நிறுவன நாள் சிறப்புரையாற்றினார் அவர்தம் உரையில்,
1970ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை நிறுவனம் கண்டுள்ள சிக்கல்களையும் அதனைத் தீர்க்க உதவிய மேனாள் நிறுவனத் தலைவர்களையும், மேனாள் இயக்குநர்கள், கல்வியாளர்கள் மற்றும் அலுவலர்களையும் நினைவுகூர்ந்தார். மேலும், அவர்தம் உரைமூலம் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி, நிறுவனம் இதுவரை கண்டுள்ள வளர்ச்சியினையும் அதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து. நிறுவன நாள் நிகழ்ச்சிகளில் ஆண்டுதோறும் கலந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் து. ஜானகி அவர்கள் நன்றி நவின்றார். நிறுவன மாணவி செல்வி ச. ஜனனி அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள், மேனாள் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
படச்செய்தி 1 : 20.10.2023 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிறுவன நாள் விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் தலைமையுரையாற்றினார். உடன் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் து. ஜானகி, நிறுவன மேனாள் துணை இயக்குநர்
திரு. க.ந. வீரபாகு சுப்பிரமணியன் மற்றும் நிறுவன இயக்குநர் (கூ.பொ.)
திரு. கோபிநாத் ஸ்டாலின் ஆகியோர்.
படச்செய்தி 2 : 20.10.2023 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிறுவன நாள் விழாவில் தமிழ் மன்றம் சார்பில் நடத்தப்பெற்ற கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது உடன் நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் மற்றும் பேராசிரியர்கள்.