மொழிபெயர்ப்பு நாள்

நிகழ்வு நாள் : 27.09.2023

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - நிகழ்ச்சி : 5
மொழிபெயர்ப்பு நாள்
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலக மொழிபெயர்ப்பு நாள் (செப்டம்பர் 30) விழா இன்று (27.09.2023) புதன் கிழமை முற்பகல் 11 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. தொடக்கமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றிட, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் தலைமையுரையாற்றினார். அவர் தம் உரையில்...
அதர்வினாய் என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, உலகின் தலைசிறந்த படைப்புகளின் மொழியாக்கப் பணிகள் மிக வேகமாய் நடைபெற்று கொண்டிருப்பதாகவும். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் மொழிபெயர்ப்பு பணிகள் துரிதமாக நடைபெறுகிறது என்பதை 80 விழுக்காடு மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார். மொழிபெயர்ப்புப் பணிகள் சரியான முறையில் நடைபெறுவதை ஆராய்வதற்கு ஆற்றல்சார் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும், மேலும், ஆய்வு மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பின் இன்றியமையா தேவை குறித்தும் விளக்கிக் கூறினார். சிறப்பு விருந்தினரைப் பற்றி குறிப்பிடும்போது தமிழ்நாடு அரசையே ஆற்றுப்படுத்தி தலைசிறந்த பதிப்பகங்களை ஒருங்கிணைத்து கண்காட்சி நடத்தியவர், அத்தகைய மாபெரும் செயலை ஆற்றிவரும் ஆழி செந்தில்நாதன் அவர்களை பாராட்டியதோடு, இவரால் இரண்டாவது பதிப்பக கண்காட்சி வருகின்ற திசம்பரில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மொழிபெயர்ப்பாளரும் ஊடகவியலாளருமான
ஆழி செந்தில்நாதன் அவர்கள் மொழிபெயர்ப்பு நாள் சிறப்புரையாக 'மொழியாக்கச் சிந்தனைகள்' எனும் தலைப்பில் உரையாற்றினார், அவர்தம் உரையில்...
எங்கு, எந்த மூலைக்குச் சென்றாலும், நம் மொழிக்கே முக்கியத்துவம் தருதல் வேண்டும் என்றார். அயல்நாடுகளில் ஆங்கிலம் பொதுமொழியாக இருந்தாலும் கூட எங்கும் ஆங்கிலத்தைப் பார்க்க முடியாது அவரவர் தாய்மொழிக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது என்றார். மொழியை வைத்தே அதிகாரம், அதிகாரத்தை வைத்தே அம்மொழி நிலைத்து நிற்கிறது. மொழிபெயர்ப்பே அதிகாரத்தை உறுதிப்படுத்தும் செயல்பாடு எனவும் எடுத்துரைத்தார்.
மொழிபெயர்ப்பு என்பது, பொருளுணர்த்துவது மட்டுமல்ல அதற்கு அப்பாற்பட்டது என்றும். மொழிபெயர்ப்பு என்ற ஒன்று இல்லையெனில் உலகிலுள்ள 7000 மொழிகள் பேசுபவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பின்றி தனித்தனி தீவுகளில் உள்ளவர்களைப் போன்று வாழவேண்டிய நிலையே ஏற்படும் என்றார். யாரோ ஓரிருவர் மொழிபெயர்க்க நேரிட்டதன் காரணமாகவே, இன்று ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி பல்கி பெருகியுள்ளது என்று கூறி. தற்போது மொழிபெயர்ப்புக்கான தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு (AI), ChatGPT போன்றவை வேகமாக வளர்ந்து வருவதாகவும், அதனை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இறுதியாக நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்கள் நன்றி நவின்றார். இவ்விழாவில் தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.