பேரறிஞர் அண்ணா 115ஆம் பிறந்த நாள் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர் திருநாள்

நிகழ்வு நாள் : 15.09.2023

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றுவிப்பதற்கு முழுமுதற் காரணமாக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் திங்கள் 15ஆம் நாள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று (15.09.2023) வெள்ளிக்கிழமை இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. முற்பகல் 11 மணிக்கு நிறுவன வளாகத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் நோக்கவுரையாற்றினார். அவர் தம் உரையில்...
பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி பேசியதோடு அவர் இருமொழி புலமையையும் புகழ்ந்துரைத்தார். தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக அண்ணா அவர்களின் 'தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்' எனும் தலைப்பில் 11 நூல் தொகுதிகள் வெளியிடப்பட்டது பெருமைக்குரியது எனக் கூறினார். ஈ.வே.ராமசாமி அவர்களின் தொண்டராக இருந்த காரணத்தினால் ராமரின் சகோதரனான பரதன் என்ற புனைப்பெயரில் அண்ணா அவர்கள் தனது படைப்புகளை எழுதி வந்ததாக குறிப்பிட்டார். மேலும், பேரறிஞர் அண்ணா அவர்களின் நூல்கள் தமிழ்மண் பதிப்பகம் அண்ணாயியம் என்ற பெயரில் 48,000 பக்கங்கள் கொண்ட 115 தொகுதிகள் வெளியிடப்பட்டது. அப்பணிக்கு துணை புரிந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழியக்கம் நிறுவுனர், தலைவர் மற்றும் விஐடி பல்கலைக்கழக நிறுவுநர், வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ. விசுவநாதன் அவர்கள் 'அண்ணா ஒரு வரலாறு' எனும் பொருண்மையில் பேருரையாற்றினார், அவர்தம் உரையில்...
பேரறிஞர் அண்ணா அவர்கள் பகுத்தறிவுப்பாதையில் பயணம் செய்தவர், இதிகாச புராணப் புரட்டுகளை எதிர்த்தவர், அவருடைய சொற்போரே 'தீ பரவட்டும்' என்ற நூலாக வெளியிடப்பட்டது. தமிழறிஞர்கள் மீது பற்றும் ஆர்வமும் மிகுந்தவர் ஒருமுறை தான் பேசவேண்டிய கூட்டம் நடைபெறும் நாளில் நாவலர் சோமசுந்தர பாரதி அவர்களின் கூட்டமும் நடைபெற இருப்பதை அறிந்து, இவர்தம் கூட்டத்தின் நாளை மாற்றி அமைத்துக்கொண்டார். மேலும், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அவரின் கூற்றுக்கேற்ப எதிர் கட்சியினராயினும் அவர்களை எதிரிகளாகக் கருதாமல் அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்த அவர் தவறியதில்லை என்று கூறினார்.
அரசியல் கூட்டங்கள் வேறு, அரசு விழாக்கள் வேறு என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் அரசுக் கூட்டங்களில் அரசியல் பேசுவதை தவிர்த்து எதை எங்கு பேச வேண்டுமோ, அதை அங்கு பேசினார். அப்படி பேசவும் வலியுறுத்தினார் என்றார்.
இந்திய விடுதலைத் திருநாளை தந்தை பெரியார் துக்கநாளாக கடைபிடிக்குமாறு அறிக்கை வெளியிட்ட நேரத்தில், அதனை மறுத்து அண்ணா இந்திய விடுதலைத் திருநாளை அனைவரும் கொண்டாடுவது, விடுதலைக்குப் பாடுப்பட்ட விடுதலை வீரர்களுக்குப் பெருமைச் சேர்ப்பதாகும் என மறுத்தார் எனவும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோது அதற்கு தலைவரை அறிவிக்காமல் அப்பதவி என்றும் பெரியாருக்கானது என்று கூறி பொதுச்செயலாளர் பதவியை மட்டுமே வகித்து வந்தார் என்றார். ஒருமுறை ஈ.வே.ரா. ஒரு கூட்டத்தில் பெட்டிச்சாவியை அண்ணாவிடம் ஒப்படைத்து விட்டேன் என்றாராம். அதற்கு அண்ணா சாவி என்னிடம்தான் உள்ளது ஆனால் பெட்டி பெரியாரிடம் தான் உள்ளது என்றாராம். இவ்வாறு இறுதி நாள்வரை பெரியாரை தன் தலைவராக கொண்டவர் அண்ணா என்றார்.
தாம் பள்ளிபயின்ற காலத்தில் தமது நெற்றியில் வைத்திருந்த திருநீற்றை தமது ஆசிரியர் ரங்கநாதன் அவர்கள் சாணம் என்று தெரிவித்ததும் அதன்வழி ஏற்பட்ட பகுத்தறிவு சிந்தனை தமக்கு திராவிட இயக்கத்தின் மீது பற்று வரக் காரணமாயிருந்ததும் என்றும், 1965இல் குடியாத்தத்தில் நடைபெற்ற ஓர் அரசியல் கூட்டத்தில் பேசியபோது அறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டு, தாம் பாராளுமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றது தமது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது இல்லையேல் தான் ஒரு வழக்கறிஞராகவோ அல்லது உயர்ந்தபட்சமாக நீதிபதியாகவோ இருந்திருப்பேன் என அண்ணா அவர்களுடன் இருந்த நாட்களை நினைவுகூர்ந்தார்.
நிறுவன ஒருங்கிணைந்த முதுகலை மாணவி செல்வி மா.பூ. லத்திகா அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட, நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்கள் நன்றி நவின்றார். இவ்விழாவில் தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.