முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - நிகழ்ச்சி அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

நிகழ்வு நாள் : 25.07.2023

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர் நிகழ்ச்சிகளில் இன்று (25.07.2023) அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக “பெரியார் ஈ.வெ.ரா மணியம்மை அறக்கட்டளை மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் மக்கள் பணியும் ஆளுமையும் அறக்கட்டளை”ஆகிய இரு அறக்கட்டளைகளின் பொறுப்பாளரும், நிறுவனத்தின் உதவிப் பேராசிரியருமான முனைவர் கா. காமராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் கூடுதல் பொறுப்பு இயக்குநர் திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினார். பின்பு முதல் அமர்வில் திரு. ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியின், கௌரவ விரிவுரையாளரான முனைவர் சே. சோ. இராமஜெயம் அவர்கள் “தந்தைப்பெயாரின் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகள்”எனும் பொருண்மையில் உரையாற்றினார் அவ்வுரையில் பெரியார் சாதி, மதங்களை தன் கருத்துச் சாட்டையால் எதிர்த்து மக்களிடம் சமத்துவத்தைக் கொண்டு வர முழங்கினார் என்றும். சாதி, குலம், கோத்திரம், வருணம் பாகுபாடோடு இருந்தக் கல்வி முறையை எதிர்த்து அனைவருக்கும் கல்வியுரிமையை வழங்க வேண்டுமென்று தம் வாழ்நாள் முழுவதும் போராடி தம் உடல் கிழப்பருவம் எய்தியும் கருத்தில் இளமைப் பருவத்தோடு மக்களுக்குக் கொண்டு சேர்த்தார் என உரையாற்றினார்.
இரண்டாம் அமர்வில் “மக்கள் போற்றும் மகான் காமராசர்”எனும் பொருண்மையில் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் க.தேவி அவர்கள் “பெருந்தலைவர் காமராஜரின் எளிமை, மக்கள் பணி, சமுதாயத் தொண்டு, அவருடைய ஆட்சிக் காலத்தில் அவரால் இயற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இறுதியாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர் மோ. ஜெயந்தி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
படச்செய்தி: 25.07.2023 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - நிகழ்ச்சி அறக்கட்டளைச் சொற்பொழிவில் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் க.தேவி அவர்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் நூல்களை பரிசளித்தார். உடன் திரு. ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளர் முனைவர் சே.சோ. இராமஜெயம் மற்றும் அறக்கட்டளைகள் பொறுப்பாளரும் நிறுவனத்தின் உதவிப் பேராசிரியருமான முனைவர் கா. காமராஜ் ஆகியோர்.