உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் செம்மொழி வேந்தர், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா - சிறப்புத் தொடர் பொழிவு : 1 மற்றும் 'கலைஞர் நினைவுகள்' நூல் வெளியீடு

நிகழ்வு நாள் : 17.06.2023

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (17.06.2023) சனிக்கிழமை செம்மொழி வேந்தர், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா - சிறப்புத் தொடர் பொழிவு : 1 மற்றும் 'கலைஞர் நினைவுகள்' நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. முற்பகல் 11 மணிக்கு நிறுவன வளாகத்தில் முத்தமிழறிஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் தலைமையுரையாற்றினார் அவர் தம் உரையில்...
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
என்ற குறளுக்கு ஏற்ப உயர்வு கலைஞரை சென்று சேர்ந்தது. நானிலம் போற்றுபவரும், தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தவருமான நம் கலைஞரை எத்தனை எத்தனை சொற்கள் உள்ளனவே அவ்வளவு சொற்களாலும் பாராட்டத்தக்கவர் என்றார். மேலும், வானுயர் வள்ளுவர் சிலை தந்த பெருந்தகை என்றும் கலைஞருக்கு புகழாராம் சூட்டினார்.
தொடர்ந்து தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர், தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்தம் தலைமையுரையில்....
திருக்குறளுக்கு உரையெழுதியபோது, இமயமலைக்கு பொன்னாடை போர்த்துவது போன்று என்று உவமைப்படுத்தியதாகவும். அதே உவமையை கலைஞருக்கு ஒப்பிடுகையில் பொதிகைமலைக்கு போர்த்துவது என்பது பொருத்தமாகயிருக்கும் என்றார். தொல்காப்பியத்தைத் தமிழறிஞர்களே ஏதோ பெரிய காடு போன்றெண்ணி உள்ளே செல்ல தயங்கி தேவைக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். ஆனால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களோ தொல்காப்பியம் அனைவருக்குமானது என்பதை நிரூபிக்கும் வகையில் அனைவரும் வந்து செல்லும் வகையில் தொல்காப்பியப் பூங்கா என்று பெயர் சூட்டினார் என்றார், திருக்குவளையில் உள்ள சிவனுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு என்றும் அது அகத்தியரால் வழிபடபட்ட சிவன் என்றும் அதனால் தானோ முத்தமிழறிஞருக்கு இயற்கையாகவே தமிழ்ப்பற்று வந்துள்ளது என்றார்.
தொடர்ந்து தொ.அ.ஈ. மருத்துமனைகள் இயக்குநர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி அவர்கள் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் திரு. கூ.வ. எழிலரசு அவர்களின் ‘கலைஞர் நினைவுகள்’ எனும் நூலினை வெளியிட்டு, "கலைஞரின் தமிழும் - தமிழ்நாடும்" எனும் பொருண்மையில் சிறப்புரையாற்றினார். அவர்தம் சிறப்புரையில் கலைஞர் தம் 94ஆண்டுகால வாழ்வில் எண்பது ஆண்டுகாலம் பொதுவாழ்வு வாழ்ந்ததாகவும், இவர் ஓர் உலக அதிசயம் என்றும், கூன் விழாத முழு நிலவு, சமத்துவபுரம் தந்த சரித்திர நாயகர் என்றும், இனம், மொழி, இடம் எனும் திராவிடத்தை உருவாக்கியவர். பெண்களுக்கு சொத்திலே சமஉரிமை, பெண்களுக்கு உள்ளாட்சியில் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பல திட்டங்களை வழங்கிய மானமுள்ள சுயமரியாதைக்காரன் என புகழுரைத்தார்.
நூலாசிரியர் கவிஞர் கூ.வ. எழிலரசு அவர்கள் ஏற்புரை வழங்கினார். அவர்தம் ஏற்புரையில்... இந்நிகழ்வு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் இரண்டாவது சொற்பொழிவு என்றும் தம் கலைஞரின் நினைவுகள் நூலைக் காட்டிலும், மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.இராசேந்திரன் அவர்கள் கலைஞர் நினைவுகள் என்ற நூலினை எழுதினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்றும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாய் அமையும் என்பதால் நூலினை எழுதி வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நிறுவன சுவடியியல் மற்றும் பதிப்பியல் மாணவர் திரு. செ.ஈரம்சிங் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட, நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் கா.காமராஜ் அவர்கள் நன்றி நவின்றார். இவ்விழாவில் தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படச்செய்தி 1 : 17.06.2023 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கவிஞர் கூ.வ. எழிலரசுவின் 'கலைஞர் நினைவுகள்' நூல் தொ.அ.ஈ. மருத்துமனைகள் இயக்குநர் மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி அவர்கள் வெளியிட தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன், தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் கா.காமராஜ், ஆய்வு மாணவர் திரு. செ.ஈரம்சிங், நூலாசிரியர் கவிஞர் கூ.வ.எழிலரசு மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் ஆகியோர்.

படச்செய்தி 2 : 17.06.2023 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் 'கலைஞரின் தமிழும் - தமிழ்நாடும்' எனும் தலைப்பில் தொ.அ.ஈ. மருத்துமனைகள் இயக்குநர் மருத்துவர்
ஜெய. ராஜமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார். உடன் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் கா.காமராஜ், தமிழ் வளர்ச்சி இயக்ககம் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் கவிஞர் கூ.வ. எழிலரசு, தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன், தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் ஆகியோர்.