உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வேதாத்திரிஅறக்கட்டளை மற்றும் இராமலிங்கம் அபிராமி அறக்கட்டளைப் பொழிவுகளும் நூல் வெளியீடுகளும்

நிகழ்வு நாள் : 14.02.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வேதாத்திரிஅறக்கட்டளை மற்றும் இராமலிங்கம் அபிராமி அறக்கட்டளைப் பொழிவுகளும் நூல் வெளியீடுகளும்

மாணவர்களின் திறனை வளர்க்கும் கல்வியாக மனவளக்கலை யோகா உள்ளது – யோகா கல்லூரி முதல்வர் உரை.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வேதாத்திரிஅறக்கட்டளை மற்றும் இராமலிங்கம் அபிராமி அறக்கட்டளைப் பொழிவுகளும் நூல் வெளியீடுகளும் இன்று 14.2.2019 நடைபெற்றது. இதில் மாநிலக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜே.ஆர்.லட்சுமி அவர்கள் எழுதிய ‘வேதாத்திரி மகரிஷி கவிதைகள் : சமூகவியல் நோக்கு’ என்னும் நூலும், பேராசிரியர் சிவபெருமான் எழுதிய திருமந்திரப் பிழிவு என்னும் நூலும் வெளியிடப்பெற்றன.

உலக சமுதாய சேவாசங்க சென்னை மண்டலத் தலைவர் திரு டி.விஜயராமகிருஷ்ணா தலைமை வகித்து நூல் வெளியிட்டு உரையாற்றியபோது, உலக சமுதாய சேவா சங்கத்தின் மாணவர்களுக்காக நடைபெறும் யோகமும் இளைஞர் வல்லமையும், யோகமும் மனிதமாண்பும் என்ற தலைப்பில் நடைபெறும் பயிற்சி மற்றும் கல்வி முறைகளையும் நன்மைகளையும் பற்றி விளக்கினார்.

வாழ்த்துரை வழங்கிய வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.ஜெயப்பிரகாஷ் அவர்கள் மாணவர்களின் திறனூக்கம் சிறப்பாக அமைவதற்கு வேதாத்திரியின் மனவளக்கலை யோகா உறுதுணையாக உள்ளது. மேலும் இன்றைய இளைஞர்களின் மனதினை வளப்படுத்திச் செம்மையுறச் செய்யும் வகையில் ஒரு பண்பாட்டுப் பயிற்சியாக வேதாத்திரி மகரிஷி இதனை ஒரு கல்விமுறையாக வடிவமைத்துள்ளார். இளைய சமுதாயம் இதனை ஏற்றுப் பயிலும்போது அவர்களின் எதிர்காலம் மேம்பட்டதாக விளங்கும் இதுவே இன்றைய நமது தேவையுமாகும் என்று தெரிவித்தார்.

பேராசிரியர் முனைவர் ஜே.ஆர். லட்சுமி பேசியபோது, வேதாத்திரி மகரிஷியின் இளமைக்காலம், அவர் கவிதைகள்வழி வெளிப்படுத்திய சமயம், அறிவியல், பொருளாதாரம், அரசியல், பெண்ணியம், தனிமனித வாழ்வியல் குறித்துக் கூறினார்.

பேரா.அ. சிவபெருமான் பேசியபோது, இறைவனை அகக்கண்ணால் பார்க்க வேண்டும். தேயமும் நாடும் திரிந்து கடவுளைப் பார்க்கக் கூடாது. உடம்பிலேயே இவரைக் கண்டு வழிபடவேண்டும். பக்தியை விற்கக் கூடாது. அதாவது பக்தியை வணிகநெறியாகக் கொள்ளாமல் அனுபவ நெறியாகக் கொள்ள வேண்டும். ஒருவர் உண்ணுகின்ற உணவு மூன்று கூறாகப் பிரியும் என்பது திருமூலர் கொள்கை. அக்கொள்கைப்படி வலிமை, மலம், மனம் என மூன்றாகும் என்று கூறினார்.

வரவேற்புரை நல்கிய பேரா.முனைவர் தி.மகாலட்சுமி பேசியபோது, இங்கு நிறுவியபின் நடந்த பணிகளைக் கூறிய அவர், வாழ்க்கையின் தத்துவத்தை தான் பின்பற்றியதோடு மற்றவர்களுக்கும் சொன்னவர். உலக அமைதி, உலக ஒற்றுமை எனும் நோக்கில் உலக சமுதாய சேவா சங்கத்தை ஏற்படுத்தியவர் வறுமை என்றால் என்ன? கடவுள் என்பது எது? துன்பத்தைப் போக்குவது எப்படி? எனச் சிந்தித்து தன்நிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தவர். அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை. சமுதாயத்திற்குத் தொண்டாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என உணர்த்தியவர். கடவுள் நிலை, உயிர்நிலை, அறிவின் நிலை என்பனவற்றைப் புரிந்துகொள்ளும்படி கூறியவர். ஆன்மிகக் கருத்துகளை புகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும் ஏற்றவாறு சொன்னவர் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திருவான்மியூர் வேதாத்திரி யோகா கல்லூரியின் செயலாளர் அன்னபூரணி, மனவளக்கலை, சென்னை மண்டலச் செயலாளர் அரிகரன் ஆகியோர் வாழ்த்துரை நல்கினர். ஏராளமான மாணவர்கள் ஆய்வு அறிஞர்கள் மனவளக்கலை அன்பர்கள் கலந்துகொண்டனர். உலக நல வாழ்த்தோடு விழா இனிதே நிறைவுற்றது. வாழ்க வளமுடன்.