மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 01.03.2023

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (01.03.2023) நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பெரியார் அறக்கட்டளைச் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.)
திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்கினார். நிறுவன சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப்புல உதவிப் பேராசிரியரும் அறக்கட்டளைப் பொறுப்பாளருமான முனைவர் வி.இரா. பவித்ரா அவர்கள் வரவேற்புரையாற்றிட, வெள்ளையம்மாள் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பாரதி நடராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் இலண்டன் திருமிகு முஹம்மது ஃபைசல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து அயலகத் தமிழர் நல வாரியத் தலைவரும், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிருவாக அறங்காவலருமான திரு. கார்த்திகேய சிவசேனாதிபதி அவர்கள் உலக அரங்கில் பெரியார் எனும் தலைப்பில் அறக்கட்டளைப் பொழிவாற்றினார். அவர்தம் உரையில் இன்றைய பெண் விடுதலை என்பது தந்தை பெரியார் முன்னெடுத்த கோட்பாடுகளின் பலனே, இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் 40 விழுக்காட்டிற்கு மேல் கோலோச்சியிருக்கக் காரணம் பெரியாரே. இன்றைய காலத்தில் பெண் கல்வி சாத்தியமானதிற்கும், தற்போதைய திராவிட மாடல் ஆட்சிக்கும் வித்திட்டவரும் பெரியாரே என்பதோடு, பெரியாரின் கொள்கைகள் உலக அரங்கில் குறிப்பாகத் தமிழ்ப்பெண்களை கொண்டு சேர்த்துள்ளது என்றார். இந்தியாவிலேயே உயர்க்கல்வி பயில்வோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகம். அதிலும் குறிப்பாக பெண்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது என்றார். மேலும், மூடப்பட்டிருந்த அரசுப் பள்ளிகளை அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் அவர்கள் திறந்து வைத்ததோடு மேலும் புதிய அரசுப் பள்ளிகளை தொடங்குவதற்கு வழிஏற்படுத்தியவர் பெரியாரே என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியாக நிறுவனத் தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புல உதவிப் பேராசிரியர் முனைவர் கோ. பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி நவின்றார், மருத்துவர் கே.பி. பிரியா கண்ணன் அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், நிருவாக அலுவலர்கள், மாணவர்கள், தமிழார்வலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.