பேரறிஞர் அண்ணா 114ஆம் பிறந்த நாள் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் திருநாள்

நிகழ்வு நாள் : 15.09.2022

அறிவுலக மேதை பேரறிஞர் அண்ணா அவர்களின் 114ஆம் பிறந்த நாள் மற்றும் உலகத் தமிழாராயச்சி நிறுவனத்தின் நிறுவனர் திருநாள் நிறுவனப் பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடத்தில் இன்று (15.09.2022 வியாழக் கிழமை) முற்பகல் 11 மணியளவில் தொடங்கியது.
நிறுவன வளாகத்திலுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு நிறுவன இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் மாலை அணிவித்து, அறிஞர் பெருமக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டு விழா தொடங்கியது. நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயலாளர் உயர்திரு. மகேசன் காசிராஜன் இ.ஆ.ப. அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றார். அவர்தம் உரையில், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் எதற்கு என்பது குறித்து பாராளுமன்றத்தில் கேட்டபோது, தமிழ்நாடு என்ற பெயர் உணர்வு பூர்வமாக தமிழக மக்கள் திருப்தி அடைவதாகவும், தமிழ்நாடு என்ற பழந்தமிழ்ச் சொல் கோடிக்கணக்கான மக்கள் மனதிலும் நாவிலும் இடம்பெறும் என்ற விளக்கம் அளித்ததையும், 1967ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தமிழ்நாடு எனும் பெயர் மாற்ற தீர்மானத்தை நிறைவேற்றினார் என்பதையும் நினைவுக்கூர்ந்தார். மேலும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தையும் அவர்தான் தோற்றுவித்தார் என்பதை எண்ணி நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதற்காகத் தான் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் நாளாகக் கொண்டாடுகிறோம் என்றார்.


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (ம) தமிழ் வளர்ச்சி துறையின் இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் தமது நோக்கவுரையில் அறிஞர் பெருமக்கள் பலராலும் போற்றப்படுபவராக திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள் என்றும். முன்னாள் இந்தியப் பிரதமர் நேரு அவர்கள் அறிஞரின் பேச்சை கேட்டு பாராட்டியதை மற்றவர்கள் அண்ணாவிடம் கூறியபோது. அண்ணா அவர்கள் நேரு கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம் என்றும், நானோ கொட்டிக்கிடக்கும் செங்கல் என்றும் பணிவுடன் பதிலளித்த அவரது பணிவை எடுத்துரைத்தார்.
ஐக்கிய நாட்டு அவையின் மூத்த அரசியல் அலுவலர் முனைவர்
இரா. கண்ணன் ’அண்ணா’ எனும் தலைப்பில் விழாப் பேருரையாற்றினார் அவர்தம் உரையில் பேரறிஞர் அண்ணாவை உலகத் தலைவர்களுடன் ஒப்பிட்டும் அவருடைய மேடைபேச்சு, அரசியல் பண்பாடு, எதிர்கட்சியாக அவர் ஆற்றிய பணிகள், அனைவரிடமும் எளிமையுடன் பழகும் தன்மையும் அவர் முதலமைச்சாராக பொறுப்பேற்ற பிறகும் அதே எளிமையுடன் பழகியதையும் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, பேரறிஞர் அண்ணா குறித்த சிறப்புக் கருத்தரங்கம் பொதுப் பணித் துறையின் உதவி செயற்பொறியாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் திருத்தணி தளபதி கே. வினாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர்
இரா. வேதநாயகி ’கலையாண்ட அண்ணா’ எனும் தலைப்பிலும், திரைப்பட இயக்குநர் திரு. பிருந்தா சாரதி ’திரையாண்ட அண்ணா’ எனும் தலைப்பிலும், இந்தியக் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த கவிஞர் இனியவன் ’ஏடாண்ட அண்ணா’ எனும் தலைப்பிலும், நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர், முனைவர் து. ஜானகி ’தமிழாண்ட அண்ணா’ எனும் தலைப்பிலும், நிறுவன தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கோ. பன்னீர் செல்வம் ’நாடாண்ட அண்ணா’ எனும் தலைப்பிலும், நிறுவன தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலத்தின் உதவிப் பேராசிரியர், முனைவர் நா. சுலோசனா ’புகழாண்ட அண்ணா’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
நிறுவன சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் உதவிப் பேராசிரியர், முனைவர் கா.காமராஜ் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்ற இவ்விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், நிருவாக அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பேரறிஞரின் பற்றாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விழாவினை சிறப்பிக்கும் வகையில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 14 வரை சிறப்புக் கழிவுத் தொகையில் நிறுவன வெளியீடுகள் 30 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரையிலான விற்பனை தொடங்கப்பட்டது.

படச்செய்திகள்
1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு நிறுவன இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் நிறுவனப் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள்.
2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாள் விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச்செயலாளர் உயர்திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையுரையாற்றுகிறார். உடன் முனைவர் கா.காமராஜ், முனைவர் பெ.செல்வக்குமார், கவிஞர் நெல்லை ஜெயந்தா, முனைவர் இரா.கண்ணன் மற்றும் நிறுவன இயக்குநர் முனைவர் ந.அருள்.
3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாள் விழா சிறப்புக் கருத்தரங்கில் திரையாண்ட அண்ணா எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநர் திரு. பிருந்தா சாரதி உரையாற்றுகிறார். உடன் கவிஞர் இனியவன், முனைவர் து.ஜானகி, முனைவர் கோ.பன்னீர்செல்வம், கவிஞர் நெல்லை ஜெயந்தா, பேராசிரியர் முனைவர் இரா.வேதநாயகி மற்றும் முனைவர் நா.சுலோசனா.