கி.ரா., வின் படைப்புலகமும் படைப்பு மொழியும் ஐந்து நாள் இணையவழித் தேசியப் பயிலரங்கம்

நிகழ்வு நாள் : 25.05.2021

கி.ரா.வின் கரிசல் எழுத்தாளர்கள் வாழையின் பக்கக்கன்று போன்றவர்கள்:

சாகித்ய அகாதமி விருது பெற்ற மறைந்த கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர், தமிழ் எழுத்துலகின் பிதாமகர், தேர்ந்தகதைசொல்லி, வட்டார வழக்குச் சொல் அகராதியின் தந்தை என்று பலவாறானப் போற்றுதலுக்குரிய கி.ராஜநாராயணன் என்ற கி.ரா.வின் நினைவைப் போற்றும் விதமாகவும் அவரின் படைப்புகளை வாசிக்கு உட்படுத்தும் விதமாகவும் சென்னை , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் "கி.ரா.வின் படைப்புலகமும் படைப்பு மொழியும்” என்னும் பொருண்மையில் (25.05.2021 முதல் 29.05.2021 முடிய) ஐந்து நாள் பயிலரங்கம் இணையவழி நடத்தியது. இப்பயிலரங்கத்திற்குத் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன், கி.ரா.வின் படைப்பாளுமையைச் சுட்டிக்காட்டினார். தலைமையுரையில் கி.ரா.வுக்குத்தமிழ்நாடு அரசு செய்த மரியாதைக்கு நன்றி தெரிவித்தார். கி.ரா.கரிசல் இலக்கியத்திற்கு மட்டும் முன்னத்தி ஏர் அல்ல. செயலிலும் முன்னத்தி ஏர்: சொல்லிய வண்ணம் செயல் என்று எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் தன்னுடைய தொடக்கவுரையில் எடுத்துரைத்தார்.எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் கி.ரா. உருவாக்கிய கரிசல் படைப்பாளர்கள் வாழைமர பக்கக் கன்றுகளைப்போன்றவர்கள் என்று கி.ரா.வின் கரிசல் கதாபாத்திரங்கள் குறித்துப் பேசும்போது வியந்து பேசினார். கி.ரா.என்றொருமானுடம் குறித்துப் பேசும்போது பேரா.முனைவர் க.பஞ் சாங்கம் கிராமங்களில்தான் உறவுகளின் மேன்மை பலப்படுகிறது என்றார். கரிசல் மக்களின் மொழியை ஒலிகளின் ஊடாகப்பதிவு செய்து கரிசல் மக்களை இலக்கியத்தின் வழியாகச் சஞ்சரிக்கச் செய்தவர் கி.ரா. என்று கி.ரா.வின் படைப்புமொழிகுறித்து முனைவர் நா.சுலோசனாபேசினார். கதைசொல்லியின் இணை ஆசிரியர், வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், கி.ரா. தான் எழுதிய எழுத்துக்களை அச்சு வடிவில் கொண்டு வருவதற்கு என்னவெல்லாம் சிரமப்பட்டார். அச்சு வடிவம் வந்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சி என கி.ரா.வுடன் தொடர்ந்து பயணப்பட்ட அனுபவங்களை உளவியல் தொடர்பாகப் பகிர்ந்துகொண்டார். பேனா எழுதத்தான் செய்யும்; கி.ரா.வின் பேனாபேசியது எனக்கி.ரா.வினூடான உறவுப் பாலத்தைவிவரித்தார் பேரா. முனைவர் சு.ஆ.வெங்கிட சுப்புராய நாயகர்.கி.ரா.வின் மகனார் திரு பிரபி என்ற பிரபாகரன் தந்தையாரின் நினைவுகளைநெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். இப்பயிலரங்கை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். பேராசிரியர்கள், படைப்பாளர்கள், தமிழறிஞர்கள்,ஆய்வாளர்கள் கி.ரா.வின் உணர்வாளர்கள் எனப் பலதரப்பினர் இணையவழிப் பங்கேற்றுச்சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியில் எழுத்தாளருக்குக் கிடைத்த மரியாதைக்குப்புதுச்சேரி, மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பெற்றது.