தத்துவ வித்தகர் த.கு.முருகேசனார் அறக்கட்டளை (ம) டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 27.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இருபத்தேழாவது நாளான இன்று (27.02.2021) முற்பகல் தத்துவ வித்தகர் த.கு.முருகேசனார் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும் நடைபெற்றன. இதில் சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் அரங்க பாரி அவர்கள் ‘‘பாவேந்தரும் தமிழின எழுச்சியும்’ என்னும் பொருண்மையில் பொழிவாற்றினார். அவர் தனது பொழிவில், “பாவேந்தரின் இனப்பற்றும் மொழிப் பற்றும் மிக முக்கியமான கூறுகளாகும். அவர் தாம் வாழ்ந்த மண்ணைச் சுற்றிலும் தமிழ் மணம் மணக்கவைத்தவர். மகாகவி பாரதியாரைவிட சங்க இலக்கியத்தில் நுண்மை பெற்றவர். தமிழைப் பல்வேறு வகையில் புரட்சிக் கருத்துகளுக்காகப் பயன்படுத்தியவர். தமிழ் மக்களின் வாழ்வியலில் தமிழ்மொழியின் இன்றியமையாத் தன்மை குறித்துத் தம் பாடல்களில் பதித்தவர். தன்னிலை மாறாமல் தன்மானம் குறையாமல் கவிதை படைத்த பெருமகன், தமிழின எழுச்சிக்குத் தம் கவிதை வரிகளைத் தந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அத்தகைய பெருமகன் தமிழ் மண் உள்ளளவும் மறையவே மாட்டார் என்பது திண்ணம்” என்று பேசினார்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் முனைவர் வித்துவான் வீ.சேதுராமலிங்கம் அவர்கள் “தமிழ் வளர்ச்சியில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்’ என்னும் பொருண்மையில் பொழிவாற்றினார். அவர் தனது பொழிவில், “தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் என்று சொல்வதைவிட தமிழ்த் தந்தை சி.பா.ஆதித்தனார் என்று சொல்வதே சாலப் பொருந்தும். அனைவருக்கும் சுவையான தரமான செய்திகளைத் தந்து உதவுவதனால் தந்தி எனப் பெயர் வைத்தவர் சி.பா.ஆதித்தனார் அவர்கள். சட்டம் படித்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் வளர்ச்சிக்காகத் தன்னை ஈந்தவர். அந்தக் காலத்திலிருந்தே தமிழ்க் கலைச்சொல் ஆக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர். முதன் முதலாக வினா-விடை போட்டிகளை நடத்தி அவற்றில் வென்றோருக்குப் பணப் பரிசுகளை அளித்தவர். இந்நிகழ்வின் மூலமாகத் தமிழை நன்றாக படிக்க வேண்டும். சங்க இலக்கியங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை தமிழ் மக்களிடையே எழுந்தது. தூய தமிழ்ப் பற்றாளராக விளங்கிய சி.பா. ஆதித்தனார் அவர்கள் தன்னுடைய இதழியல் பணி மூலம் தமிழ் மொழியை வளர்த்திருக்கிறார். அத்தகைய தன்மையாளரைத் தமிழ் மக்களாகிய நாம் வியந்து போற்றுவோம். நற்றமிழை வளர்ப்போம்” என்று பேசினார். இந்நிகழ்வில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் பெ.செல்வக்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். அறக்கட்டளைப் பொறுப்பாளர் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் ஒருங்கிணைத்துத் தலைமையுரையாற்றினார். திரு.வே.து.வெற்றிச்செல்வன் தமிழ்வளர்ச்சித் துறைப் பணியாளர் அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் து.ஜானகி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.