புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை (ம) சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை

நிகழ்வு நாள் : 20.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் தமிழ்த்தாய் பெருவிழாவில் 20 – ஆம் நாள் நிகழ்வாக, 20.2.2021 – அன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை (ம) சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கையின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவும் நூல்வெளியீடுகளும் நடைபெற்றன. இந்நிகழ்வுக்கு ஆய்விருக்கைப் பொறுப்பாளர் பேரா. ம.செ. இரபிசிங் வரவேற்புரை வாழ்த்துரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர்
கோ. விசயராகவன் அவர்கள் இவ்விழாவைத் தொடங்கிவைத்துத் தலைமையுரை ஆற்றினார். நிறுவனப் பேராசிரியர்கள் முனைவர் பெ. செல்வகுமார், முனைவர் து. ஜானகி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வின்போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆய்விருக்கையின் சார்பில் பொன்மனச் செம்மலின் பொன்மொழிகள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சமூகத் தொண்டு, கலை (ம) சமூகத்துக்கு எம்.ஜி.ஆர். ஆற்றிய பங்களிப்பு ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. திருப்பத்தூர் மாவட்டப் பாரதி மாணவர் தமிழ்ச் சங்க நிறுவனர் முனைவர் தெய்வ. சுமதி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அவர் பேசும்போது, "தமிழகத்தில் சமூக முன்னேற்றத்துக்கு எம்.ஜி.ஆர். நடைமுறைப்படுத்திய திட்டங்கள் பெரிதும் உறுதுணையாக இருந்தன. அவர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டம் அன்னை தெரசாவால் பாராட்டப்பட்டதுடன், அயல் மாநில முதலமைச்சர்களாலும் பெரிதும் போற்றப்பட்டது. தமிழுக்காக எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்டதே உலகப்புகழ்வாய்ந்த தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகும். திருவள்ளுவர் திருநாள் விழாவைக் கொண்டாட ஆணை பிறப்பித்தும் தமிழில் கையெழுத்திட ஆணை வழங்கியும் வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் வளர்ச்சித் திட்டங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கி வைத்தார். நாடகத் துறையில் வாழ்க்கையைத் தொடங்கிய புரட்சித் தலைவர், திரைத்துறையில் உலகப் புகழ்பெற்று, அரசியலின் மூலம் மக்களுக்கான பல்வேறு பணிகளை அரங்கேற்றினார். எம்.ஜி.ஆரின் மன உறுதியை இக்காலத்து இளைஞர்கள் படிப்பினையாகக் கொள்ளவேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார். முடிவில் எம்.ஜி.ஆர். ஆய்விருக்கை ஆய்வு உதவியாளர் முனைவர் ஈ. விஜய் நன்றி நவின்றார்.