உரைவேந்தர் ஔவை சு.துரைச்சாமிப் பிள்ளை அறக்கட்டளை (ம) மறைமலை அடிகளார் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 15.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பதினைந்தாவது நாளான இன்று (15.02.2021) முற்பகல் உரைவேந்தர் ஔவை சு.துரைச்சாமிப் பிள்ளை அறக்கட்டளை சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் இராமேஸ்வரம், பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.இராமன் அவர்கள் ‘உரைவேந்தர் பார்வையில்…’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தனது பொழிவில் திட்ப நுட்பத்துடன் கூடியவை ஔவையின் உரைகள் என்றும், செம்மையான உரையில்லா பழந்தமிழ் நூல்களுக்கு முன்னுரிமை தந்து உரை எழுதிய பன்முகப் புலமையாளர் ஔவை என்றும், மில்டன், ஷேக்ஸ்பியர் முதலிய வெளிநாட்டு கவிஞர்களை உரையிடையில் மேற்கோள்காட்டும் மேதமை உடையவர் என்றும் பலர் தயங்கும் பதிற்றுப்பத்து, சூளாமணி, யசோதர காவியம் முதலிய அருந்தமிழ் நூல்களுக்குத் திறமான புலமையால் செழுமை கூட்டியவர் உரைவேந்தர் என்றார். மேலும், மணிமேகலையில் புத்தனைக் குறித்துவரும் ஆரியன் என்ற சொல்லுக்கு, அருமை என்பதை அடியாகக் கொண்டு பிறந்த அருந்தமிழ்ச் சொல் என்று மிகப்புதுமையாகச் சித்தாந்தக் கலாநிதி பொருள் உரைத்துள்ளதையும் பொழிவாளர் விளக்கினார். முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசினோரே என்ற பதிற்றுப்பத்தின் நாற்பத்தைந்தாம் பாடலின் கடைசி அடிக்குப் பழைய உரையில் இருந்து வேறுப்பட்டுக் கடலிடத்தே எதிர்ந்த பகைவரை எதிர்த்துப் பொருதழித்த வேந்தர் எனப் புத்துரை வழங்கிய ஔவையின் திறம் போற்றத்தக்கதாகும் எனக் கூறினார். உரைவேந்தரின் பங்களிப்புகள் 28 தொகுதிகளாக, ஏறத்தாழ 5000 பக்கங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தமிழாய்வு மாணவர்கள் கூர்ந்து ஆராய்ந்து ஔவையின் நுண்மாண் நுழைபுலத்தைத் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வெளிப்படுத்த வேண்டும். இதற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முனைய வேண்டும் என்றார் முனைவர் இரா.இராமன். சொற்பொழிவுக்கு அறக்கட்டளைகள் பொறுப்பாளர் முனைவர் ஆ.மணவழகன் வரவேற்புரை ஆற்றினார். மொழிபெயர்ப்புத் துறை இயக்குநரும் உரைவேந்தர் ஔவையின் பெயரனுமான முனைவர் ந.அருள் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் தலைமையுரை ஆற்றினார். அதில் ஔவை போன்ற தமிழறிஞர்கள் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறையே பிறப்பார்கள்; ஔவையின் உரைகளை இன்றைய மாணவர்கள் படித்துத் தமிழுக்குத் தொண்டாற்ற முன் வரவேண்டும் என்றார். அதியன்தான் இன்றில்லை இருந்திருந்தால் அடடாவோ! ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய் ஓர் ஆண் ஔவை என வியப்பான்! என்ற உரைவேந்தரைப் போற்றும் புகழ்பெற்ற பாடலை உரைவேந்தரின் மருமகள் திருமதி. சீதை மெய்கண்டான் பாடி மகிழ்வித்தார்.
இதனைத் தொடர்ந்து மறைமலை அடிகளார் அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் புதுச்சேரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் சொ.சேதுபதி அவர்கள் ‘குன்றக்குடி அடிகளாரின் தமிழ்ப்பணிகள்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தனது பொழிவில் அவர் தம் உரையில், அடிகளார் அவர்களின் இளமைப் பருவம், விபுலானந்த அடிகளாருடன் இருந்து தொடர்பு, அவரிடமிருந்து பெற்ற சமூக மற்றும் தமிழிப் பற்று, வடநாட்டு சமய மாநாட்டில் தமிழில் உரையாற்றிய சிறப்பு, நிறுவிய அமைப்புகளில் பக்திப் பனுவல்களுக்கு முன்பாக திருக்குறளை பயிற்றுவித்த பாங்கு என பல்வேறு தமிழ்ப்பணிகளையும் எடுத்துக்கூறினார். நிகழ்வில் குன்றக்குடி அடிகளாரின் தமிழ்ப்பணிகள் என்ற நூலினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் வெளியிட, கூடலூர் அரசு கல்லூரியின் முதல்வர் முனைவர் நெடுஞ்செழியன் அவர்கள். பெற்றுக்கொண்டார். சொற்பொழிவுக்கு அறக்கட்டளைகள் பொறுப்பாளர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார். நிறுவன முனைவர் பட்ட ஆய்வு மாணவர் அ.ஆறுமுகம் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். நிறுவன முனைவர் பட்ட மாணவி சி.மகேஷ்வரி நன்றியுரை ஆற்றினார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பதினைந்தாவது நாளான இன்று (15.02.2021) பிற்பகல் குறள் மலைச் சங்கம் சார்பில் குறள் மலைச் சங்கத்தின் 22ஆம் ஆண்டு விழா, திருக்குறள் மாமலை மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, வள்ளுவத்தில் மருத்துவம் கருத்தரங்க விழா ஆகியவை அடங்கிய முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் குறள் நடனம் நடைபெற்றது. இதில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம், தலைவர் வி.ஜி.சந்தோசம் தலைமையுரையாற்றினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் முன்னிலை வகித்தார்.