அறிவியல் தமிழறிஞர் பெ.நா.அப்புசாமி அறக்கட்டளை (ம) திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 09.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஒன்பதாவது நாளாக (09.02.2021) முற்பகல் அறிவியல் தமிழறிஞர் பெ.நா.அப்புசாமி அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மூணாறு அரசுக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் சே.ஞானேஸ்வரன் அவர்கள் ‘சங்ககாலச் சடங்கு முறைகள் (சமூகப்பண்பாட்டு மானிடவியல் ஆய்வு)’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தனது பொழிவில் சங்காலச் சடங்குகள் பற்றிய ஒரு தனி வரைவு நூல் இதுவரை நம்மிடமில்லை. அதிலும் மானிடவியல் நோக்கில் எழுதப்பட்ட நூலில்லை. ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குமுறை மாற்றங்களை மிக ஆழமாக சங்ககாலம் முதல் இக்காலம் வரையிலான இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு மானிடவியல் நோக்கில் பண்பாட்டு அடிப்படையில் எடுத்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து தனித்தமிழ்க் காவலர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் க.முரளிதரன் அவர்கள் ‘சங்க இலக்கியத்தில் குடிப்பெயர்கள்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இவர் பேசுகையில் சங்க இலக்கிய திணை அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகளில் உள்ள குடிப்பெயர்கள் பற்றியும் அவர்களின் தொழில் முறைகள் பற்றியும் மிக விளக்கமாக எடுத்துக் கூறினார். சொற்பொழிவுக்கு அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் து.ஜானகி அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.

(09.02.2021) பிற்பகல் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மீனாட்சி கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் அ.யோகேஸ்வரி அவர்கள் ‘தமிழர் மரபில் மட்பாண்டங்கள்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தனது பொழிவில் மட்பாண்டங்கள் தோற்றமும் வளர்ச்சியும், மட்பாண்டங்கள் கலைஞர்களின் வரலாறு, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியமும், மட்பாண்ட கலைகளின் இன்றைய நிலை போன்றவற்றை தொல் தமிழர் மரபின் அடிப்படையில் எடுத்து விளக்கினார். இந்நிகழ்விற்கு அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் து.ஜானகி அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.