தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா 2021 - தொடக்க விழா

நிகழ்வு நாள் : 01.02.2021

தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா 2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 எனும் பெருவிழா நடத்த திட்டமிட்டு இன்று (01.02.2021) தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். முன்னதாக, மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் திரு. க.பாண்டியராசன் அவர்கள், தலைமையுரையாற்றினார். தமிழ் வளர்ச்சித்துறை (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மேனாள் தென்சென்னைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் முதுநிலை மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் அவர்கள் முன்னிலை வகிக்க, மேனாள் மாண்புமிகு அமைச்சர் (ம) மேனாள் தலைவர், (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) சொல்லின் செல்வர் முனைவர் வைகைச்செல்வன் அவர்கள் விழாச் சிறப்புரையாற்றினர். எழுச்சிப்பாவலர் மருது அழகுராஜ் அவர்கள் (ஆசிரியர், டாக்டர் புரட்சித்தலைவி நமது அம்மா - நாளிதழ்) அம்மா புகழுரை ஆற்ற, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். முனைவர் ஈ.விசய் அவர்கள் (ஆய்வு உதவியாளர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கலை (ம) சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை) நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டு (1970-2020) மலரை வெளியிட்டு தொடக்கவுரை ஆற்றிய மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது உரையில்…
கடல்கோளை வென்று, கடைச்சங்கம் கண்டு, இலக்கியவளம் படைத்த இணையில்லாத் தமிழ்க்கொடியே…
உலகத்தின் முதல்மொழியாய்க் கண்மலர்ந்து வந்தவளே… ஒப்பில்லாத் திருக்குறளில் அறம்சொல்லித் தந்தவளே…
தமிழர் குலத்தின் விளக்காக விளங்கும்
தமிழ் அன்னையே உன்னை வணங்கி,
எந்நாட்டு மக்களும் போற்றும் இந்நாட்டு இங்கர்சால்
தென்னாட்டு பெர்னாட்சா
இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு கண்ட மாமேதை…
பேரறிஞர் அண்ணாவின் பெருமையைப் போற்றி,
கடையேழு வள்ளல்கள் காணாத கொடைவள்ளல்…
தனக்கு இருந்த இரண்டு கைகளையும் பிறருக்கு
அள்ளிக் கொடுப்பதற்கே அதிகம் பயன்படுத்திய
பரங்கி மலைப் பாரி வள்ளல்…
அகிலம் வியக்கும் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை
மதுரை மாநகரில் மாண்புடன் நடத்தி…
உலகமெல்லாம் தமிழ்ப்புகழ் உலாப்போக உறுதுணை புரிந்த பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவடி வணங்கி,
சரித்திரம் புகழ்பாடும் சாதனைத் தலைவி; வறியவர் வாழ்வுசெழிக்க, எளியவர் ஏற்றம் காண, எண்ணிலா நலத்திட்டங்கள் தந்து,
நஞ்சை விளையும் தஞ்சையில் எழுச்சிமிகு எட்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தி, தமிழுக்கும், தமிழருக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் புகழ்சேர்த்து,
வங்கக் கடலலைகள் பாதம் தொட்டு வணங்கிப்போக,
சந்தனப் பேழையில் சந்திர வடிவமாய்க்
கண்மூடித் துயிலிருக்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திசைநோக்கித் தொழுது வணங்குகிறேன்.
இந்த இனிய விழாவில் தலைமை ஏற்க வருகை தந்திருக்கும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. க.பாண்டியராஜன் அவர்களுக்கும் இந்த இனிய விழாவில் வரவேற்புரை ஆற்றவிருக்கும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்களுக்கும் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கும் மேனாள் தென்சென்னைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெ.ஜெயவர்தன் அவர்களுக்கும் விழாச் சிறப்புரையாற்றவிருக்கும் எழுச்சிப் பாவலர் திரு. மருது அழகுராஜ் அவர்களுக்கும் நன்றியுரை ஆற்றவிருக்கும் இந்நிறுவனப் பேராசிரியர் திரு. பெ.செல்வக்குமார் அவர்களுக்கும் இந்த விழாவில் திரளாகக் கலந்து கொண்டிருக்கிற அரசு அலுவலர்களுக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பேராசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் சான்றோர் பெருமக்களுக்கும் என்னுடைய வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பெருமுயற்சியில், 1968-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது, உலக அளவில் தமிழ் ஆய்வுகளை வளப்படுத்துவதற்குத் தமிழாய்வு நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. இந்தக் கருத்துக்குச் செயலாக்கம் கொடுக்கும் வகையில், தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் தனித்தன்மை மிகுந்த கருத்துருவாக்கத்தால் 1970-ஆம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, தரமணியில் உருவாக்கம் பெற்றது.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
என்ற பாவேந்தர் பாரதிதாசனாரின் முழக்கத்துக்கு ஏற்ப, தமிழ் ஆய்வுலகில் தனித்தன்மையோடு இந்நிறுவனம் சங்கம் முழங்கி வெற்றி நடைபோட்டு வருகிறது. பேரறிஞரின் பெருமுயற்சியில் உருவான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தனது ஐம்பதாண்டு அகவையில் அடி பதிக்கிறது.
அன்னைத் தமிழுக்கு அயராது அரும்பணியாற்றி
இந்நிறுவனத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவின் பெயரில், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் 10இலட்சம் உரூபாய் வைப்பு நிதியில் 2004-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அறக்கட்டளை ஒன்று இந்நிறுவனத்தில் செயல்பட்டு வருகிறது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எண்ணற்ற அறக்கட்டளைகளில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடங்கிய “பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை”யின் வைப்பு நிதியே அன்றைக்கு மட்டுமல்லாது, இன்றைக்கும் மிக அதிக வைப்புநிதியில் செயல்பட்டுவரும் அறக்கட்டளையாக உள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களைக் குறித்த நூல் வெளியீடுகளுக்கும் பேரறிஞர் அண்ணாவைக் குறித்த தமிழியல் ஆய்வுகளுக்கும் தமிழ் ஆய்வறிஞர்கள் இவ்வறக் கட்டளையின் வாயிலாகப் பயன்பெற்று வருகின்றனர்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் அறக்கட்டளை என்பது அன்றைக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வளர்ச்சி வரலாற்றுக்கு வைக்கப்பட்ட சிறுபுள்ளி. அந்தப் புள்ளியைப் பூக்களாக்கிக் கோலம் வரைவதுபோல் எண்ணற்ற தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் இந்நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இந்த அரசில் செயலாக்கம் பெற்று வருகின்றன.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்ச் சமூகத்துக்கு ஆற்றிய அரும்பணியை நினைத்து மதித்துப் போற்றிய புரட்சித் தலைவர் அவர்கள், அண்ணாவின் திருவுருவத்தைக் கொடியில் பதித்தார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறக்கட்டளை தொடங்கினார்கள். அன்னைத் தமிழில் ஆளுமை பெற்றுத் திகழ்ந்த பேரறிஞர் அண்ணாவின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2012-ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, இந்த நிறுவனத்தின் மீது தனிக்கவனம் கொண்டு, மிகுந்த சிறப்புடன் செயல்படுத்தப்பட்ட தமிழ் உயராய்வுத் திட்டங்கள் தமிழ்மொழிக்கு உலகத் தரம் பெற்றுத் தருகின்றன. தமிழ்நாட்டு ஆய்வு மாணவர்களும் உலகெங்குமிருந்து வருகை புரிகின்ற மொழியியல் வல்லுநர்களும் பயன்பெறும்படியான கட்டமைப்பைத் தந்து பற்பல ஆய்வு நூல்களையும் அரிய நூல்களையும் பதிப்பித்துத் தமிழ்மொழி உலகத் தரத்துக்கு உயர வழி அமைத்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ் வளர்ச்சித் திட்டங்களை நினைந்து நன்றி பாராட்டும் விழாவாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2012-ஆம் ஆண்டு முதல், பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் - பெருவிழா கொண்டாடப்பட்டு வருவது மிக்க மகிழ்ச்சிக்குரியது. நன்றி மறவாத தமிழர்களின் பண்பாட்டை இந்நிறுவனப் பணியாளர்களிடமும் மாணவர்களிடமும் நான் கண்டு மகிழ்கிறேன்.
பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் வானுயரக் கட்டடத்தில் புதிதாக வார்க்கப்பட்டது. வானத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இக்கட்டடத்தின் வனப்புமிகு தமிழ் அங்கங்களாக, பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம், திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம், நவீன மயமாக்கப்பட்ட மொழியியல் ஆய்வுக் கூடம், சுவடிகள் பாதுகாப்பு மையம், தமிழ்த்தாய் ஊடக அரங்கம், பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம் உள்ளிட்டவை இடம்பெற்றுத் தனிச்சிறப்புப் பெற்றுள்ளன. அதன்பின்னர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாப் பெருநூலகமும் தனிநாயகம் அடிகளார் பெயரில் ஆய்வு மாணவர் விடுதியும் ஆய்வு மாணவியர் விடுதியும் ஆய்வறிஞர் விடுதியும் இந்நிறுவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
வசந்த காலத்தில் பூக்கும் மரம்செடி கொடிகள் போல், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வருகைக்குப் பின்னர், புதுப்பொலிவும் புத்துணர்ச்சியும் பெற்று இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் தமிழுக்கு உலக அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகின்றன.
பல்வேறு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பன்னாட்டுக் கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், திருக்குறள் முற்றோதல் நிகழ்வுகள், திருக்குறள் நெறிபரப்பும் பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள், திருக்குறள் நெறிபரப்பும் ஓவிய போட்டிகள், தமிழகமெங்கிலுமிருந்து வருகை தரும் கவிஞர்களின் மாபெரும் கவியரங்குகள், மூலிகைச் செடிகள் நடுதல், மரக்கன்றுகள் நடுதல், ஆய்வு நூல்கள் வெளியிடுதல், அரிய நூல்கள் வெளியிடுதல், இலக்கிய ஆய்வு மாநாடுகள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளோடு வருடா வருடம் தமிழ்த்தாய் - பெருவிழா தமிழ்த் திருவிழாவாகத் தமிழுக்கும் தமிழை வளர்த்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் இந்நிறுவனத்தின் வழியாக அணி சேர்த்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.
“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்”
என்ற பெருங்கனவுடன் பாட்டிசைத்தார் மகாகவி பாரதியார். அவரது கனவை, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலமாகச் செயல்படுத்தி நனவாக்கிக் கொண்டிருக்கிறது. தகுதி வாய்ந்த அறிஞர் பெருமக்களைக் கொண்டு, தமிழ்ப் படைப்புகளை வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும் என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு விதமான மொழிபெயர்ப்புப் பணிகளையும் இந்நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. திருவள்ளுவப் பெருந்தகையின் திருக்குறளையும் ஔவையின் ஆத்திச்சூடியையும் மகாகவி பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட பாடல்களையும் சீன, கொரிய மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்து உலகமெங்கும் தமிழர்தம் சிந்தனைச் சித்தாந்தங்களை இந்நிறுவனம் பரப்பி வருகிறது.
“தமிழால் முடியாதது எதுவும் இல்லை; எல்லாம் தமிழால் முடியும்”
என்று எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் சூளுரைத்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அந்த முழக்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் வளர்ச்சித் திட்டங்களாக இங்கே எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
பழைமைவாய்ந்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பது காலத்தின் தேவை. அவற்றைப் படிஎடுத்துப் பதிப்பிப்பது தமிழுக்குச் செய்யும் தொண்டு. அதனடிப்படையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சுவடிகள் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுச் சுவடியியல் சார் பதிப்புப் பணிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன. அழியும் நிலையில் உள்ள அரிய நூல்களை வெளியிட்டுப் பதிப்பித்துத் தமிழ் இலக்கியங்கள் உயிர்ப்பிக்கப் படுகின்றன.
உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் பல்வேறு சான்றோர் பெருமக்கள் ஆராய்ந்து உரை எழுதியுள்ளனர். எக்காலத்துக்கும் எந்நாட்டினருக்கும் பொருந்தும் வகையில் வாழ்வியல் கருத்துகளைக் கொண்டது திருக்குறள். திருக்குறளைப் படித்துப் புரிந்துகொள்வது மட்டுமல்லாது, பார்த்து அனுபவமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிந்தையில் எழுந்தது. அதன் காரணமாக, தமிழ் அறியாப் பிறமொழி பேசுவோரும் புரிந்து கொள்ளும் வகையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10 இலட்சம் உரூபாய் நிதி ஒதுக்கீட்டில், திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம் திறந்து வைக்கப்பட்டது. திருவள்ளுவரின் குறட்பாக்கள் வண்ணங்களாய் மின்னுகிற காட்சிக்கூடம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களது அரசின் சாதனைகளுக்குச் சாட்சி சொல்கிறது.
“பிரெஞ்சு மொழிக் கலைக்கழகத்தைப் போன்று, தமிழுக்கும் ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க வேண்டும்; அதன் மூலம் தமிழ் ஆய்வுகளை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்” என்ற பேரறிஞர் அண்ணாவின் நோக்கம் இன்று மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இந்த அரசில் நனவாகிவிட்டது.
“தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு!
என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் பாடல்வரிகள் உணர்வுப்பூர்வமானவை. சங்க இலக்கியங்களைப் படிக்கின்ற பொழுது, பழந்தமிழர்களின் தனித்தன்மை மிகுந்த பண்பாட்டு விழுமியங்களை அறியமுடிகிறது. நூல்களுக்குள் அறியக் கிடைக்கும் தமிழர்தம் வாழ்வியல் வரலாறுகளை பழந்தமிழர் ஓவியக் காட்சிக்கூடம் இந்த நிறுவனத்தில் காண்போரின் கண்களுக்கு விருந்தாகி, அறக்கருத்துகளை அற்புதமாகப் பறைசாற்றி வருகிறது.
முல்லைக்குத் தேர்கொடுத்த பாரி, மயிலுக்குப் போர்வை போர்த்திய பேகன், மணித்தமிழ் வளர்த்த மாநகர் மதுரை, தாமரையின் இலைகளைப் போல் அகன்று விரிந்த அதன் அழகிய தோற்றம் தஞ்சாவூர் இராஜராஜசோழன் திருக்கோவில் படிமங்கள் உள்ளிட்ட பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடப் படிமங்கள் தமிழரின் பண்பாட்டை உலகுக்குப் பறைசாற்றுகின்றன.
செய்ந்நன்றி மறவாத செந்தமிழர் பண்பாட்டுக்கு இலக்கணமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்தாய் - பெருவிழாவை நான் அடையாளம் கண்டு மகிழ்கிறேன். எண்ணற்ற தலைப்புகளில் அறிஞர் பெருமக்கள் ஆற்றவிருக்கும் சொற்பொழிவுகளால் தமிழ்மொழி நலமும் வளமும் ஒருசேரக் காணட்டும். பேரறிஞரின் வழியில் புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவரின் நெறியில் மாண்புமிகு அம்மா அவர்களும் மாண்புமிகு அம்மா அவர்களின் இந்த அரசும் தமிழுக்கும் தமிழருக்கும் அயராமல் தொடர்ந்து தொண்டாற்றும் என்று தெரிவித்து விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்!