திருமூலர் ஆய்வு இருக்கையும் – வேட்டவலம் கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்றமும் இணைந்து – கவியரங்கமும் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா

நிகழ்வு நாள் : 10.02.2019

வள்ளுவர் காட்டிய வாழ்வியல் நெறியில் இளைய
சமுதாயம் செயல்படவேண்டும் இயக்குநர் பேச்சு

திருமூலர் ஆய்வு இருக்கையும் – வேட்டவலம் கவியரசு கண்ணதாசன் இலக்கிய
மன்றமும் இணைந்து தமிழ்த்தாய் -71இல் திருவள்ளுவர் விழா – கவியரங்கமும்,
இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவும் 10.02.2019 இன்று நடைபெற்றன.

விழாவிற்கு வந்து இருந்தவர்களை வேட்டவலம் கவியரசு கண்ணதாசன்
இலக்கிய மன்ற நிறுவனர் எஸ்.எஸ்.இஸ்மாயில் வரவேற்றார். நிகழ்ச்சிக்குக் கவிஞர்
ஆவடிக்குமார் தலைமை தாங்கினார். கவிஞர் நந்திவரம் ப. சம்பத்குமார், துரை
வீரப்பாண்டியத் தென்னவன் முன்னிலை வகித்தனர். கவிஞர் இரா.ரமணி எழுதிய
“கவிச்சாரல்…” என்ற புத்தகத்தை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர்
கோ. விசயராகவன் வெளியிட எழுத்தாளர் ந. சண்முகம் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து “வள்ளுவர் காட்டும் வாழ்வியல்” என்ற கவிதைத் தொகுப்பைத் திருமூலர்
ஆய்விருக்கை நிறுவனர் பேரா. முனைவர் மகாலட்சுமி வெளியிட இலங்கை எஸ்.பி.
தாட்சாயணிசர்மா பெற்றுக்கொண்டார். முனைவர் மகாலட்சுமி பேசும்போது,
எத்தனைக் கருத்துக்களைக் கவிதைகளாகப் பதிவிரக்கம் செய்திருப்பினும்
திருக்குறளைத் தாண்டிச் சிந்தித்துவிட முடியாது. இருப்பினும் பரம்பரை
பரம்பரையாகப் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றைக் கவிதைகள் பதிவு
செய்துள்ளன. அவ்வகையில் இன்றைய கவியரங்கிலும் பல புதிய கருத்துகள் பதிவு
செய்யப்பட்டமை பாராட்டிற்குரியது என்று கூறினார். கவிதை நூலை வெளியிட்டு
முனைவர் கோ.விசயராகவன் பேசும்போது, வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை –
வாழ்வியல் நெறியை எப்படி மனிதர்கள் வாழவேண்டும். இன்றைய இளைய சமுதாயம்
எதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதை மிகச் சுருக்கமாக அதே
நேரத்தில் ஆழமாகக் குறட்பாக்கள்மூலம் விளக்கினார். மேலும், அனைவரும்
வீட்டிலும் இருக்கின்ற ஒரு நூலாக வேத நூலாகத் திகழ்வது திருக்குறள் மட்டும்தான்.

உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலான திருக்குறளைத் தமிழில்
படிக்க வேண்டும் என்பதற்காகவே இன்று 150ஆவது பிறந்தநாள் கொண்டாடி
வருகின்ற காந்தி அவர்கள் தமிழனாகப் பிறக்க வேண்டும் என விரும்பினார்.
கவிஞர்கள், புலவர்கள் காலத்தை வென்று நின்று இன்றும் வாழ்கிறார்கள் என்பதற்குத்
திருவள்ளுவரே சான்று என்றார்,
விழாவில் கவிஞர்கள் அனுசுயாதேவி, எஸ். தேவிகாராணி, அல்லி,
ரிஹானாறஸீம், மணிமேகலை சித்தார்தன் உள்படப் பலர் கவிதை வாசித்தனர்.
பின்னர் கவியரங்கில் கலந்து கொண்டவருக்குப் பாராட்டும், நினைவுப்பரிசும்,
விருதுகளும் வழங்கப்பட்டன. கவிஞர் சேலம் இரா.ரமணி நன்றி கூறினார்.