வைணவ ஆய்விருக்கை சார்பாகச் சிறப்பு சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 06.02.2019

வைணவ ஆய்விருக்கை சார்பாகச் சிறப்பு சொற்பொழிவு

மாண்புமிகு தமிழ்த்தாய் 71- தமிழாய்வுப் பெருவிழா நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வைணவ ஆய்விருக்கை சார்பாகச் சிறப்பு சொற்பொழிவும், ஸ்ரீஸ்ரீ ப்ரேமி அண்ணாவின் நூல் வெளியீடும், முனைவர் நா.ஜெயலெட்சுமி, திரு. பி.பி. பத்மநாபன் ஆகியோரின் நூல் வெளியீடும் நடைபெற்றது. இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். வைணவ இருக்கைப் பொறுப்பாளர் முனைவர் நா.ஜெயலெட்சுமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதன் பின்பு பன்னிரு ஆழ்வார்கள் என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் உள்ள நூலும், ஸ்ரீஸ்ரீ ப்ரேமி அண்ணா (ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்)வின் ஆத்மநிவேதனம் என்ற நூலும் வெளியிடப்பட்டது. மேனாள் துறைத் தலைவர், வைணவத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வைணவ இருக்கையின் ஒருங்கிணைப்பாளர் ந.அ.வேங்கட கிருஷ்ணன் அவர்கள் திருக்குறளில் வைணவம் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அதில் திருக்குறளுக்கும் வைணவக் கருத்துகளுக்கும் உள்ள தொடர்பை எடுத்துத் தெளிவாக விளக்கினார். குறிப்பாக லீலா விபூதியாக அடியளந்தான் என்பதையும், நித்ய விபூதியாக, தாமரைக் கண்ணன் என்ற குறளுக்கும் ஒப்புமைப்பகுதி நம்மாழ்வார் கூறிய தொல்லை இன்பம் என்பது எல்லையில்லாத இன்பம் என்பதையும் கூறினார். திருக்குறளில் எல்லா மதத்திற்கும் உண்டான கருத்துகளை ஒப்புமைப்படுத்தும் அளவிற்குத் திருக்குறளில் உள்ள வைணவக் கருத்துகளை விளக்கினார். ஆழ்வார்களுள் பேயாழ்வாருக்கும் திருவள்ளுவருக்கும் ஒற்றுமை, உறவுகள், கருத்துகள் வருங்கால மாணவர்கள் ஆய்வு செய்வதற்கு ஏற்ற வகையில் விரித்துப் பேசினார்.

பேயாழ்வாரும் திருமயிலையில் அவதரித்தவர். திருவள்ளுவரும் திருமயிலையில் பிறந்ததாகக் கூறுவர். பேயாழ்வாருக்கு திருமுடி மேலே கட்டியது போல் இருக்கும். திருவள்ளுவருக்கும் இவ்வாறு இருக்கும். உருவத் தோற்றத்தை ஒப்புமைப் படுத்தினார். தமிழ்த் தலைவன் என்று பேயாழ்வாரை திருவரங்கத் தமுதனார் தமது தனியனில் கூறுகின்றார். உலகப் பொதுமறை என திருக்குறளுக்கு உண்டு. தமிழ் மறை என்று நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திற்கு பெயர். மேலும் திரு என்பதை சேர்த்துத்தான் கூறுவது வைணவ மரபு. உதாரணமாக திருக்கன்னமுது. திருக்குறள், திருவள்ளுவர் என்பதால் பெயரளவில் வைணவம் சார்ந்ததாக இருக்கலாம் என்று ஒப்புமைப் படுத்திக் கூறினார்.

நிறைவாக திருமூலர் ஆய்விருக்கை பொறுப்பாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்கள் நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்கள்.